நிலத்தடி நீர் ஆழத்தில் உள்ள பகுதிகளில் ஆழ் துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, டிச. 6: திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர் ஆழத்தில் உள்ள பகுதிகளில் குழாய் கிணறு, துளை கிணறு அரசு மானியத்தில் அமைப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நிலத்தடிநீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள குறுவட்டங்களில் குழாய் கிணறு, துளைகிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50சதவீதம் அல்லது ரூ.25ஆயிரம், டீசல் பம்பு, மோட்டார் பம்பு நிறுவுவதற்கு அதன் விலையில் 50சதவீதம் தொகை ரூ.15ஆயிரம், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50சதவீதம் தொகை ஏக்கருக்கு ரூ.10ஆயிரம், பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்தேக்க தொட்டி நிறுவுவதற்கு ஒரு பயனாளிக்கு 50சதவீத தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ.350 மிகாமலும் நிதிஉதவி ரூ.40ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளில் குழாய் கிணறு, துளை கிணறு அமைக்கும் பணி திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர்பாதுகாப்பான ஆழத்தில் உள்ள அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை, ரங்கம், நவல்பட்டு, திருவெறும்பூர், வேங்கூர், திருச்சி வடக்கு, தெற்கு, லால்குடி, வாளாடி, அன்பில், புள்ளம்பாடி, கல்லக்குடி, ஆமூர், சிறுகாம்பூர், வளநாடு போன்ற 17பாதுகாப்பான குறு வட்டங்களிலும், இதர 3 பணிகள் அனைத்து குறு வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானியம் பெறுவதற்கு விவசாயிகள் வேளாண்மை இணை இயக்குனர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை ெதாடர்பு கொண்டு விண்ணப்பம் அளித்து பெயரினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து உரிய பணி ஆணையை பெற்று மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் பெற்று விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணி முடிக்கப்பட்டபின் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியமாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: