புயலால் பாதித்த வீடுகளுக்கு முழுநிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 49 இடங்களில் நடந்தது: 650 பேர் கைது

திருவாரூர், டிச. 6:   கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் அனைத்திற்கும் முழு நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்   650 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால்  பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகள், காலனி வீடுகள் என அனைத்திற்கும் முழு நிவாரணம் வழங்கிட வேண்டும், அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும், நிவாரண தொகையினை பயனாளிகளிடம்  நேரடியாக வழங்கிட வேண்டும்,  வீடுகளை புனரமைக்க தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25 ஆயிரம் வழங்கிட வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்கிட வேண்டும். இதேபோல் மாடுகளுக்கு ரூ 50 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ 10 ஆயிரமும், கோழிகளுக்கு ரூ 500ம் இழப்பீடாக வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அவசர அவசியம் கருதி 30 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்குவதுடன். நிவாரண தொகையாக ரூ 10 ஆயிரம்  வழங்கிட வேண்டும்,  தென்னை மரங்களுக்கு ரூ 50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல் மா, வாழை, பலா, தேக்கு, வேம்பு அனைத்து மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாய தொழிலாளர்களுக்கும், மீனவர்களுக்கும் வேலையில்லா நிவாரணமாக ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியாக ரூ 500 வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று  மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.திருவாரூர் அருகே மாங்குடியில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையிலும், வலங்கைமானில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமையிலும், திருத்துறைப்பூண்டியில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன்  ஆகியோர் தலைமையிலும், மன்னார்குடியில் கட்சியின்  மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமையிலும் என மொத்த 49 இடங்களில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில்  சுமார் 10 ஆயிரம்  பேர் கலந்து கொண்டனர். இந் நிலையில் குடவாசல், நன்னிலம், பேரளம், வலங்கைமான், நீடாமங்கலம், திருமக்கோட்டை, முத்துப்பேட்டை  உட்பட மொத்தம் 12 இடங்களில் மட்டும் போலீசார் மொத்தம் 320 பெண்கள் உட்பட 650 பேரை  கைது செய்து ஆங்காங்கே உள்ள திருமணமண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Related Stories: