பூதலூர் ரயில்வே மேம்பாலத்தை ஆக்கிரமிக்கும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் அவதி

திருக்காட்டுப்பள்ளி, டிச. 6: பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள சாலையை கால்நடைகள் ஆக்கிரமித்துள்ளதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிமக்கள் தஞ்சை, திருச்சி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்காக பூதலூர் வழியாக செங்கிப்பட்டிக்கு இருவழி தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் பூதலூர் நால்ரோடு, ரயில்வே மேம்பாலம், வில்வராயன்பட்டி பகுதிகளில் தினம்ேதாறும் 20க்கும் மேற்பட்ட மாடுகள், கன்று குட்டிகள் சாலையிலேயே தஞ்சமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் கால்நடைகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.  எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைப்பதுடன் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம்: தஞ்சை- கும்பகோணம் சாலையில் பாபநாசம் பகுதி உள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் 24 மணி நேரமும் வரிசையாக வாகனங்கள் வந்து செல்லும். இந்த சாலையில் அகலம் குறைந்து காணப்படுவதுடன் அதிகளவில் திருப்பங்கள் உள்ளது. இந்த சாலையோரம் அதிகளவில் ஊர்கள் உள்ளன. குறுகலான சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தும் வகையில் இந்த சாலையில் கால்நடைகள் எப்போதும் உலா வந்து கொண்டிருக்கும். மேலும் சாலைகளில் கால்நடைகள் படுத்து கொள்ளும். மேலும் சாலைகளை நாய்களும் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பாபநாசம் பேரூராட்சி நிர்வாகம், தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: