கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாய சங்கத்தினர் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம்

ஆலங்குடி, டிச.6:  ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் தென்னை, வாழை, தேக்கு உட்பட பல்வேறு மரங்களை இழந்த விவசாயிகளுக்கும் தமிழக அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதியிடம் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனைத்தொடர்ந்து, விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். புயலால் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக பெற்ற கடன்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இலுப்பூர்: இலுப்பூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த இந்த  மனு கொடுக்கும் போராட்டத்திற்கு அன்னவாசல் ஒன்றிய விவசாய தொழிலாளர்கள்  சங்க ஒன்றிய செயலாளர் ஜோஷி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி  தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய  தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு மாநில அரசுக்கு அதிக நிதி  வழங்க வேண்டும். இலுப்பூர் அருகே உள்ள கோரையாற்றின் அருகே உள்ள பட்டா  இடங்களில் உள்ள மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர்  சங்கர், மாவட்ட பொருளாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய  செயலாளர் சுப்பையா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

பொன்னமராவதி:    பொன்னமராவதி  தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக அரசு நிவாரணம்  வழங்க வேண்டி ஒன்றிய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள்  சங்கம் சார்பாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். விவசாயிகள்   தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர்  பிச்சை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்  கலந்துகொண்டனர். கறம்பக்குடி: கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன் மாநில விவசாய தொழிலாளர் சங்க துணைத்  தலைவர் முகமது அலி தலைமையில், மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி முன்னிலையில் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சேதமடைந்த தென்னை மரத்திற்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமான ஓட்டு வீடு, கூரை வீடுகள் அனைத்திற்கும் ரூ.25,000 வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நிவாரணம் கேட்டு கோரிக்கை அடங்கிய மனுக்களை தாசில்தாரிடம் வழங்கினர். கந்தர்வகோட்டை:கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதிகள் கஜா புயல் காரணமாக பல சேதங்களை அடைந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பஸ் நிலையத்திலிருந்து பேரணியாக வந்து தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: