கஜா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட கடற்கரை விளையாட்டு போட்டிகள் 8, 9ம் தேதிகளில் மீமிசலில் நடக்கிறது

புதுக்கோட்டை, டிச.6:   புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் மீமிசலில் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த நவ.17 மற்றும் 18ம் தேதிகளில்  நடைபெறுவதாக இருந்த 2018-19ம் ஆண்டுக்கான கடற்கரை விளையாட்டுப்  போட்டிகள், கஜா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி ஆடவருக்கான கையுந்து பந்து, கால்பந்து, கபடி  விளையாட்டுப் போட்டிகள் வரும் 8ம் தேதி   அன்றும், மகளிருக்கான கையுந்து பந்து,  கால்பந்து, கபடி விளையாட்டுப் போட்டிகள் 9ம் தேதி  அன்றும் மீமிசல் அரசு  மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.  இப்போட்டிகளில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டிகளில்  கலந்துகொள்பவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல்  வேண்டும். அதற்குரிய சான்றுகள் சமர்ப்பித்தல் வேண்டும். கடற்கரை  விளையாட்டு போட்டிகளில் கீழ்க்கண்டுள்ள எண்ணிக்கையில் ஆடவர் மற்றும்  மகளிர் (ஒரு அணிக்கு) விளையாட அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரை கால்பந்து  ஆடவர் மற்றும் மகளிர் விளையாட்டில் ஒரு அணிக்கு 5 நபர்களும், கடற்கரை  கையுந்துபந்து ஆடவர்  மற்றும் மகளிர் விளையாட்டில் ஒரு அணிக்கு 2 நபர்களும்,  கடற்கரை கபடி ஆடவர் மற்றும் மகளிர் விளையாட்டில் ஒரு அணிக்கு 6 நபர்களும்  கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல்  இடத்தினை பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான  போட்டிகளில் கலந்துகொள்ளுதல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில்  முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.500ம், 2ம் இடம் பெறுபவர்களுக்கு  தலா ரூ.350ம், 3ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.200ம் பரிசுத்  தொகையாக காசோலை மூலம் வழங்கப்படும். இப்போட்டிகளில் கலந்துகொள்ள  விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் வரும் 8ம் தேதி அன்று அன்று காலை 8 மணிக்குள்ளும்,  விளையாட்டு வீராங்கனைகள் 9ம் தேதி அன்று காலை 8  மணிக்குள்ளும்  போட்டிகள் நடைபெறும் இடமான மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு   வந்து தங்களது அணியின் பெயரினை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: