காற்று மாசு, நுண்ணுயிரி கண்டறிவதில் மடிப்பு நுண்ணோக்கி பயன்படுகிறது பயிற்சி பட்டறையில் தகவல்

பெரம்பலூர், டிச. 6:  பயிர்களில் ஒட்டிவாழும் பூச்சி, புழுக்களின் முட்டை, நோய் கிருமிகளை அடையாளம் காண்பதிலும் காற்று மாசு, நுண்ணுயிரிகளை கண்டறிவதிலும் மடிப்பு நுண்ணோக்கி விவசாயிகளுக்கு பயன்படுகிறது என்று பயிற்சி பட்டறையில் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பேசினார். பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப துறையின் நிதியுதவியுடன் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் ஒருநாள் மடிப்பு நுண்ணோக்கி தொகுத்தல் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய பயிற்சி பட்டறை நடந்தது. உயிரியல் ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். தலைமையாசிரியர் கஜபதி தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் நுண்ணியிரியல் துறைத்தலைவர் சுரேஸ்ராஜா வாழ்த்தினார்.

பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பேசும்போது, இந்தியா வம்சாவழி அமெரிக்க உதவி பேராசிரியரும், அறிவியலாளருமான மனோ பிராகாஸ் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் ஜிம்சைபல்ஸீகியுடன் இணைந்து பிளாஸ்டிக் காகிதத்தாலான மடிப்பு நுண்ணோக்கியை கண்டுபிடித்துள்ளனர். கையடக்க மடிப்பு நுண்ணோக்கியை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதை நமது செல்போன்களில் இணைத்து கொண்டு பாக்டீரியா, பூஞ்சை, பாசிகள், புரோட்டோசோவா, தாவர மற்றும் விலங்குசெல்கள், பூச்சிகள் மற்றும் கொசுக்களின் தலை, கால்கள், இறகுகளின் படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும். இந்த மடிப்பு நுண்ணோக்கியானது விவசாயிகளுக்கு பயிர்களில் ஒட்டிவாழும் பூச்சி மற்றும் புழுக்களின் முட்டைகளை கண்டறிவது, நோய் கிருமிகளை அடையாளம் காண்பது காற்றிலுள்ள மாசு மற்றும் நுண்ணுயிரிகளை கண்டறிவதில் பெரிதும் பயன்படுகிறது.

இந்த மடிப்பு நுண்ணோக்கியானது பள்ளிகள், கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களுக்கும் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் இந்திய அரசின் உயிர்தொழில் நுட்பவியல்துறை ஆராய்ச்சி நிதியுதவியோடு மடிப்பு நுண்ணோக்கிகளையும் கொடுத்து மாணவரிகளிடையே அறிவியல் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் கிராமப்புற வசதியற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இந்த மடிப்பு நுண்ணோக்கியானது கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த கருவியாக செயல்படும் என்றார்.பயிற்சி பட்டறையில் 100 மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். மேலும் ஆராய்ச்சி மாணவர்கள் கார்த்திகா, மதன், கிரிஸ் பயிற்சியளித்தனர். பள்ளி விலங்கியல் ஆசிரியர் முத்துமாரிசாமி நன்றி கூறினார்.

Related Stories: