ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டில் கிராம சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை

ஸ்ரீமுஷ்ணம், டிச. 6: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேத்தாம்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் பருவமழையால் இக்கட்டிடத்தின் உள்ளே மழைநீர் தேங்கி, சுற்றுச்சுவர்கள் அனைத்தும் பலவீனமடைந்தும் காணப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்க முடியாத சூழல் நீடித்து வந்தது. ஆகையால் மாவட்ட ஆட்சியர், இத்துறைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, அவ்விடத்திலேயே புதிய அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிட்டு, இக்கட்டிடம் சேதமடைந்து தான் உள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்டும் வரை, இக்கட்டிடத்தை பயன்படுத்த வேண்டாம் என்றனர். தொடர்ந்து அவர்கள், புதிய கட்டிடம் கட்டுவதற்காக அவ்விடத்தை அளவிட்டு குறியீட்டு பணியினை மேற்கொண்டனர். அப்போது தேத்தாம்பட்டு கிராமமக்கள், புதிய கட்டிடம் கட்டும் வரை கிராம சேவை மைய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட வழிகாண வேண்டும் என்று கூறினர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, கிராம சேவை மைய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அப்பகுதியில் படர்ந்திருந்த புதர்கள் அனைத்தும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முற்றிலுமாக அகற்றப்பட்டு, அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories: