சாலை வசதி கேட்டு நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு

விழுப்புரம், டிச. 6:  சாலை வசதி கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். விழுப்புரம் 27வது வார்டு சிதம்பரனார் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் அங்கு தனியார் பள்ளியும் அமைந்துள்ளது. போதிய கழிவுநீர் வாய்க்கால் வசதியில்லாததால் புதிய கால்வாய் வசதி கேட்டு அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். பல்வேறு இழுபறிக்கு பின் அங்கு இரண்டு கட்டமாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் சாலை பணிகள் தொடங்கவில்லை.

அப்பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் மழை காலங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை புதுப்பிக்கக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி கேட்டு நகராட்சி ஆணையர் லட்சுமியிடம் மனு அளித்தனர். அதே போல், சிதம்பரனார் தெருவில் பாதாள சாக்கடை தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் கூறியிருந்தனர்.

Related Stories: