நல்லபாம்பை பிடிக்க நள்ளிரவில் முதல்வருக்கு போன் ெசய்த பெண்

புதுச்சேரி,  டிச. 6:  வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க நள்ளிரவில் முதல்வர் நாராயணசாமிக்கு போன் செய்த பெண்ணால் புதுச்சேரியில் பரபரப்பு

ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி  அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் விஜயா. நேற்று முன்தினம் இரவு இவர்  தனது பிள்ளைகள் வசந்த்(20) சந்தியா(17) ஆகியோருடன் படுத்து தூங்கிக்  கொண்டிருந்தார். அப்போது ஒரு நல்லபாம்பு வீட்டிற்குள் புகுந்து அங்கு  பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் சென்று மறைந்தது. பின்னர் பாம்பு  சீறும் சத்தம் நீண்ட நேரமாக கேட்கவே, விஜயாவும், குழந்தைகளும் பாம்பை  வெளியே அனுப்ப முயன்றும், அது பதுங்கியிருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் நள்ளிரவில் உயிருக்கு பயந்து கொண்டு தூக்கத்தை தொலைத்ததோடு  வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க பலமுறை செல்போன் நம்பர்களை தொடர்பு கொண்டும்  யாரும் அழைப்பை எடுக்கவில்லை.பின்னர் எல்லாவற்றையும் முயற்சித்து  தோற்றுப்போன விஜயாவும், அவரது மகனும், மகளும் வேறுவழியின்றி முதல்வர் நாராயணசாமியை செல்போனில் அழைத்தனர்.  தூக்கத்தில் இருந்த முதல்வர் உடனடியாக போனை எடுத்து பேசினார்.

வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டதாகவும், தாங்கள் அனைவரும் உயிர்பயத்தில் இருக்கும்  விவரத்தையும் முறையிட்டனர். உடனடியாக வனத்துறை  அதிகாரி குமாரை தொடர்பு கொண்டு மூன்று பேரையும் பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் கோபி, தாமரைச்செல்வன் ஆகியோர் மணவெளிக்கு  சென்று விஜயா வீட்டில் இருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக  பிடித்து சென்றனர். அதன்பிறகே விஜயாவும், அவரது பிள்ளைகளும் நிம்மதி  பெருமூச்சு விட்டனர். நள்ளிரவில் துரிதமாக செயல்பட்டு 3 பேரின் உயிரை  காக்க உதவிய முதல்வருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே மீண்டும் முதல்வர் நாராயணசாமி அந்த வீட்டுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் புதரால் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருப்பதாக விஜயா புகார் தெரிவித்தார். இதையடுத்து புதரை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.

Related Stories: