அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த வலியுறுத்தல்

புதுச்சேரி,  டிச. 6:   அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் செயலாளர் சுகுமாரன் விடுத்துள்ள  அறிக்கை: தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப்போட வைத்த விவகாரம் குறித்து  விசாரித்த காவலர் மீதான புகார் ஆணையத்தின் தலைவரும், உயர்நீதிமன்ற  ஓய்வுபெற்ற நீதிபதியுமான இராஜசூர்யா புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள  அனைத்து காவல் நிலையங்களிலும் 3 மாதத்திற்குள் சிசிடிவி கேமரா பொருத்த  வேண்டுமென டிஜிபிக்கு கடந்த 29-08-2018 அன்று உத்தரவுப் பிறப்பித்தார்.  ஆனால் இதுவரையில் புதுச்சேரி காவல்துறை இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. பாகூர்  காவல் நிலையத்தில் ஜெயமூர்த்தி என்ற தலித் இளைஞர் போலீசாரால் அடித்துத்  துன்புறுத்தியதால் நீதிமன்ற காவலில் இறந்துப் போனார். இதுகுறித்து விசாரணை  மேற்கொண்டு வரும் நீதித்துறை நடுவர் பாகூர் காவல்நிலையத்தில் ஆய்வு  செய்தபோது அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டதைக் கண்டு  பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவல் நிலையத்தில் சிசிடிவி  கேமரா பொருத்தப்பட்டாலும் அதன் பதிவுகள் டிஜிபி அலுவலகத்தில் பதிவு செய்து  பாதுகாக்கும் வகையில் வழிவகைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்  காவல் மரணம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியும்.எனவே காவலர் மீதான புகார் ஆணையம் அளித்த உத்தரவுப்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இதுகுறித்து கவர்னர், முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: