திருவண்ணாமலையில் நிர்வாகிகள் பாலியல் தொல்லை தனியார் காப்பக சிறுமிகள் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் விசாரணை தீவிரமடைகிறது

திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலையில் தனியார் காப்பக நிர்வாகிகளின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.திருவண்ணாமலை திருவள்ளுவர் நகரில் மெர்சி ஹோம் எனும் பெயரில், மாணவ, மாணவிகளுக்கான தனியார் காப்பகம் செயல்பட்டு வந்தது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ரூபன்குமார்(65), அவரது மனைவி மெர்சிராணி(55), உறவினர் மணவாளன்(60) ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, இந்த காப்பகத்தை நடத்தி வந்தனர். இந்த காப்பகத்தில், ஆதரவற்ற 47 மாணவ, மாணவிகள் தங்கியிருந்தனர்.இந்நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கிடைத்த புகாரின் பேரில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரடி ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.மேலும், இதுதொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, காப்பக நிர்வாகிகள் ரூபன்குமார், மெர்சிராணி, மணவாளன் ஆகியோர் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காப்பக நிர்வாகிகளின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட, 10, 14 வயதுள்ள 4 சிறுமிகள், திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் 2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் விஸ்வநாதன் முன்னிலையில், ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

அப்போது, போலீஸ், வக்கீல்கள் உள்ளிட்ட யாரையும் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளும், கண்ணீர் மல்க தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தனர்.சுமார் 50 பக்கங்களில் பதிவு செய்யப்பட்ட சிறுமிகளின் ரகசிய வாக்குமூலம், மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணை தீவிரம் அடையும் என தெரிகிறது.

Related Stories: