அரக்கோணம் அருகே அதிகாலை பரபரப்பு அடுத்தடுத்து 2 இடங்களில் தண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது

அரக்கோணம், டிச. 6: அரக்கோணம் அருகே நேற்று அதிகாலை அடுத்தடுத்து 2 இடங்களில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் இரண்டரை மணி நேரம் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை- மகேந்திரவாடி- சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையங்களுக்கு இடையே ேநற்று அதிகாலை ரயில்வே ஊழியர்கள் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 5.30 மணியளவில் மகேந்திரவாடி அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, இதுகுறித்து சோளிங்கர், சித்தேரி ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, முசாபர்பூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூர் வரை செல்லும் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு அருகே வந்துகொண்டிருந்தது. உடனடியாக ரயில்வே அதிகாரிகள், டிரைவருக்கு தகவல் தெரிவித்து அந்த ரயிலை நிறுத்தினர். இதனால் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

அதேபோல், அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பெங்களூரு பாசஞ்சர், சென்னை- கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், தன்பாத்- ஆலப்புழா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ், சென்னை- பெங்களூர் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணியளவில் விரிசல் சரி செய்யப்பட்டு, யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.ஆனால் ரயில் சிறிது தூரம் சென்றபோது, ஏற்கனவே விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு அருகே மீண்டும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் மீண்டும் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி அடுத்தடுத்து ஏற்பட்ட விரிசல்களை சரி செய்தனர். பின்னர், காலை 8 மணிக்கு பிறகு யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களும் ஒவ்வொன்றாக தண்டவாள விரிசல் ஏற்பட்ட இடத்தில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது.

உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. அடுத்தடுத்து தண்டவாளம் விரிசல் ஏற்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தண்டவாள விரிசல் காரணமாக அரக்கோணம்- காட்பாடி மார்க்கத்தில் இரண்டரை மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பணிக்கு செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Related Stories: