வேலூர் வசந்தபுரம் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை வாகன போக்குவரத்தை சீராக்கும் வகையில் அதிகாரிகள் தகவல்

வேலூர், டிச.6: வாகன போக்குவரத்தை சீராக்கும் வகையில் வேலூர் வசந்தபுரம் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ள ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிறப்பான சேவைகள் அளித்து ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவாயை பெருக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக அனைத்து வழித்தடங்களிலும் இருவழி மின்பாதை அமைத்தல், கூடுதல் தண்டவாள பாதைகள் அமைத்தல், பிளாட்பாரங்களின் உயரம் மற்றும் நீளம் அதிகரித்தல், குடிநீர், நிழற்கூரை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்தல், ரயில் வந்து செல்லும் நேரம் அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், பிளாட்பாரத்தில் பொது மற்றும் முன்பதிவு ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறித்த தகவல் பலகைகள் ஆகியவை அமைக்ககும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.பயணிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காப்பீடு உட்பட பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரயில் போக்குவரத்து சேவையில் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ரயில்வே லெவல் கிராசிங்குகள் இல்லா நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளை கொண்ட ரயில்வே லெவல் கிராசிங்குகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. போக்குவரத்து குறைவாக மக்கள் நெரிசல்மிக்க குடியிருப்புகள் அமைந்த பகுதியில் உள்ள ரயில்வே லெவல்கிராசிங்குகளில் சுரங்கப்பாதைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, வேலூரில் கஸ்பா, அரியூர் பகுதிகள் மற்றும் காட்பாடி அடுத்த வடுகந்தாங்கலில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேலூர் வசந்தபுரம் ரயில்வே லெவல் கிராசிங்கை மக்கள் எளிதாக கடந்து செல்லும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘வசந்தபுரம் ரயில்வே கேட் வழியாக கஸ்பா, ஆர்.என்.பாளையம், சின்னஅல்லாபுரம், சதுப்பேரி, சிறுகாஞ்சி, அகமேடு, செம்பேடு, பழவேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேலூருக்கு வந்து செல்கின்றனர்.ரயில் வரும் நேரங்களில் கேட் மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், வசந்தபுரம் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான திட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்றனர்.

Related Stories: