போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட வேலூர் வட்டச்சாலை திட்டம் முடக்கம்? நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம்

வேலூர், டிச.6: போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட வேலூர் வட்டச்சாலை திட்டம் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், அவசரகால சிகிச்சைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகளையும், விபத்தில் சிக்குபவர்களையும் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஆம்புலன்ஸ்கள் தடையின்றி கோல்டன் அவர்ஸ் எனப்படும் உயிர்காக்கும் நேரத்தில் வந்து சேரவும் வேலூர் நகர வட்டச்சாலை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் அறிவிக்கப்பட்டது.அதன்படி, இந்த வட்டச்சாலை வடுகந்தாங்கல், செதுவாலை, தார்வழி, புரம், சாத்துமதுரை, அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, மேலகுப்பம், பூட்டுத்தாக்கு, அம்முண்டி, காட்பாடி, லத்தேரி வடுகந்தாங்கலில் முடியும். இதன் மூலம் பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளில் இருந்து வரும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அடையும்.அதேபோல் அந்த வழியில் இருந்தும், சித்தூர் மார்க்கத்தில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக செல்ல வேண்டிய பிற வாகனங்களும் அதே வழியில் செல்லும். அதேபோல் சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் காட்பாடி, அம்முண்டி, பூட்டுத்தாக்கு வழியாக செல்லும்.

சென்னை மார்க்கத்தில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் பூட்டுத்தாக்கு, மேலக்குப்பம், மூஞ்சூர்பட்டு, அடுக்கம்பாறை, நெல்வாய் வழியாக செல்லும். சென்னை மார்க்கத்தில் இருந்து குடியாத்தம், பேரணாம்பட்டு, வி.கோட்டா, கோலார், ஆந்திர மாநிலம் செல்லும் வாகனங்கள் பூட்டுத்தாக்கு, அம்முண்டி, லத்தேரி, காட்பாடி வழியாக செல்லும்.திருவண்ணாமலை, கடலூர் மார்க்கத்தில் இருந்து கர்நாடகம், ஆந்திரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நெல்வாய், கந்தனேரி, வடுகந்தாங்கல் வழியாகவும், பள்ளிகொண்டா வழியாகவும் செல்லும். இந்த வட்டச்சாலை திட்டத்துக்கான முதல்கட்ட சர்வே மற்றும் நிலஎடுப்புப்பணிகள் பேரணாம்பட்டு தொடங்கி வடுகந்தாங்கல் வரை நடந்து வந்தது. அதேபோல் செதுவாலை சுற்றுவட்டாரங்களிலும் சர்வே பணிகள் நடந்தன.இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக இப்பணியை நிறுத்தி வைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தும், அவர்களுக்கு இதுதொடர்பாக விளக்கி சமரசப்படுத்திய பின்னரும் பணியை மேற்கொண்டு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘திட்டம் முடக்கப்படவில்லை. தற்காலிகமாக வேலூர் வட்டச்சாலை பணியை நிறுத்தி வைத்துள்ளது. மக்களின் கருத்தறிந்த பின்னர் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும்’ என்றனர்.

Related Stories: