1.44 லட்சம் ஏக்கரில் பிசான சாகுபடி நெல் நாற்று நடவுப்பணிகள் தீவிரம்

நெல்லை, டிச. 6:  நெல்லையில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நாற்றங்கால்களில் உள்ள நெல் நாற்றுகளை எடுத்து நடவு செய்து வருகின்றனர். 1.44 லட்சம் ஏக்கரில் பிசான சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் நெல்லை மாவட்டத்திற்கு அதிக மழை கிடைத்து வருகிறது. இந்த பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு உட்பட 11 அணைகளும் நிரம்பி விடுவது வழக்கம். இந்த ஆண்டு தாமதமாகத்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. எனினும் இதுவரை போதிய பருவமழை இல்லை. வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய மாதமான செப்டம்பரில் நல்ல மழை இருந்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் ஓரளவு நீர் நிரம்பி இருந்தது. நேற்றைய நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 124.90 அடியாக உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 1155 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைப்பகுதியில் 26 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 134.87 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 104.95 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 464 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைப்பகுதியில் 21 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்கு விநாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நெல்லை குறிச்சி, முன்னீர்பள்ளம் பகுதிகளில் நாற்றாங்கால்களில் உள்ள நெல் நாற்றுகளை எடுத்து வயல்களில் நடவு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 1.44 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் நெல் நடவு பணிகள் முடிந்துள்ளன. பாளையங்கால்வாய் பாசனத்தில் நெல் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பிசான பருவ நெல் சாகுபடிக்கு மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். தற்போது நடவு செய்தால் 110 நாட்கள் கழித்து நெல் அறுவடை செய்யலாம். பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர் இருப்பு உள்ள நிலையில் பிசான சாகுபடி முழுமைக்கும் தண்ணீர் கிடைக்கும். எனவே பிசான பருவ நெல் சாகுபடியை தண்ணீர் தட்டுப்பாடின்றி முடித்து விடலாம் என நம்புகிறோம் என்றனர்.

Related Stories: