சேரன்மகாதேவியில் தொடர் மின்வெட்டு

வீரவநல்லூர், டிச. 6:  சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதில் சப்-கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகங்கள், டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை, கருவூலகம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், எல்ஐசி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலங்களும், 6க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளும் உள்ளன.

சமீபகாலமாக சேரன்மகாதேவி பகுதியில் தொடர்ந்து சீரற்ற மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முறையாக லைன்கள் பராமரிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மட்டும் கடந்த 2 மாதங்களில் 4 முறைக்கும் மேலாக பழுதடைந்துள்ளது. பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அதிகாரிகள் முறையாக சரிசெய்யாமல் தற்காலிகமாக சரிசெய்து இயக்குவதால் மீண்டும் மீண்டும் இப்பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் பொதுமக்கள் தவிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் பல்வேறு இடங்களில் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் அலுவலக நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் அரசு அலுவலகங்கள் மற்றும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேரன்மகாதேவி பகுதியில் சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Related Stories: