பாபர் மசூதி இடிப்பு தினம் குமரி கடலோர பகுதிகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

நாகர்கோவில், டிச.6 :  பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (6ம் தேதி) அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள எஸ்.பி. நாத் உத்தரவிட்டு உள்ளார். சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாருடன், கியூ பிரிவு உள்ளிட்ட அனைத்து உளவு பிரிவு போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கடலோர பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பஸ் நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாகவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களின் உடமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்கள், பாலங்களிலும் நேற்று மாலை முதல் சோதனை  நடந்தது. ரயில்வே போலீசாருடன், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். நவீன படகுகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். லாட்ஜ்களில் தங்கி இருப்பவர்களின் முகவரிகள் சோதனை செய்யப்படுகின்றன. சந்தேகத்துக்கிடமான வகையில் யாராவது தங்கி இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி லாட்ஜ் உரிமையாளர்களை போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர். குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நேற்று மாலை முதல் விடிய, விடிய ரோந்து பணிகள், வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.  குமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டணம், குளச்சல், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு நேற்று மாலை முதல் வாகன தணிக்கை நடந்தது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் ஆகிய 4 துணை போலீஸ் சரகங்களிலும் ரோந்து பணிக்காக சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைவால் டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்தப்படவில்ைல. கடந்த ஆண்டு ஓகி புயல் காரணமாக போராட்டங்கள் குறைந்து இருந்தன. ஆனால் இன்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது.  நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகில், வடசேரி சந்திப்பு, மீனாட்சிபுரம், அண்ணா ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகளும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கோரி, இந்து அமைப்புகள் சார்பிலும் போராட்டங்கள் நடப்பதால், போராட்டங்கள் நடக்கும் இடத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: