அரசு சார்பில் ஆணை வழங்கப்பட்டும் தரமணியில் திறக்கப்படாத ரேஷன் கடை: பொதுமக்கள் அவதி

வேளச்சேரி, டிச. 6: அரசு சார்பில் கடை திறக்க ஆணை வழங்கப்பட்டும், தரமணி தந்தை பெரியார் நகரில் ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  சென்னை மாநகராட்சி, 180வது வார்டுக்குட்பட்ட தரமணி, தந்தை பெரியார் நகரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 1,500 பேர் குடும்ப அட்டை  வைத்துள்ளனர். இவர்களில் 1100  குடும்ப அட்டைதாரர்கள் தரமணி அண்ணாநகரில் உள்ள   ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகிறார்கள். மீதமுள்ளவர்கள் தரமணி பஸ் நிலையம் அருகே உள்ள ரேஷன் கடையில் பொருள் வாங்குகிறார்கள். இந்த கடைகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் ரேஷன் பொருட்கள் வாங்க செல்பவர்கள்  ஆட்டோவிற்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும், இங்கிருந்து செல்ல வேண்டுமென்றால் தரமணி 100 அடி சாலையை  கடந்து தான் செல்ல வேண்டும். அப்போது,  சிலர் விபத்தில் சிக்குகிறார்கள். அதனால் இந்த பகுதி மக்கள் தாங்கள் குடியிருக்கும்  பகுதியிலேயே ரேஷன் கடை வேண்டும் என   பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் நகர், அண்ணா திடல் சாலையில் அப்போதைய எம்எல்ஏ  தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பல்நோக்கு கட்டிடத்தில் ஒரு கட்டிடத்தில் டிசியுஎஸ்  பல்பொருள் அங்காடிக்கும், இன்னொரு கட்டிடம் ரேஷன் கடைக்கும்  ஒதுக்கப்பட்டது. அதற்கான திறப்பு தேதியும் செப்டம்பர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை திறக்கப்படவில்லை.  பல்பொருள் அங்காடி மட்டும் அன்றைய தேதியில் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறது.  எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக  ரேஷன் கடை திறக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் பெரும்பாலும் ஏழை மக்களே வசித்து வருகிறார்கள். 2  கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வது கூடுதல் செலவு ஆகிறது.  கிடைக்கின்ற  லாபத்தை ஆட்டோ வாடகைக்கும், மோட்டார் சைக்கிள்  பெட்ரோலுக்கும் செலவழிக்க வேண்டி  உள்ளது. மேலும், சாலையை கடந்து செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். அதனால்  பல வருடங்களாக நாங்கள் குடியிருக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி ரேஷன் கடை திறப்பதாக அரசு சார்பில்  அறிவிப்பு வெளியானது. ஆனால்  அன்றும் திறக்கப்படாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த ரேஷன் கடை ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. இதனால்    சம்பந்தப்பட்ட துறை உயர்  அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு ரேஷன் கடையை விரைவில் திறக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

Related Stories: