மின்கட்டணம் செலுத்தாததால் கரன்ட் கட் இருளில் மூழ்கிய அங்கன்வாடி மையம் : படிக்க முடியாமல் குழந்தைகள் தவிப்பு

தண்டையார்பேட்டை, டிச. 6: சென்னை தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் தமிழக அரசின் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் சுமார் 15 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு சுமார் 80 குழந்தைகள்  படிக்கின்றனர். இந்த மையத்தின் அருகிலேயே ஈம சடங்கு காரியம் நடத்தும் கூடம் மற்றும் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்ளது. இங்கு இரவு பாடசாலை நடத்தப்படுகிறது. இந்த 3 கட்டிடமும் சென்னை மாநகராட்சியின்  கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த 3 மாதங்களாக இந்த 3 கட்டிடத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்கள், பாடம் நடத்தும் ஆசிரியைகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால்,  குழந்தைகளுக்கான பாடம் நடத்த முடியாமலும், இரவு பாடசாலை நடத்த முடியாமலும் தவிக்கின்றனர்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஆர்கே நகர் மின்வாரிய அலுவலகத்தில், குழந்தைகளின் பெற்றோர் முறையிட்டனர். அதற்கு, மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 3 கட்டிடங்களுக்கும் கடந்த 5 மாதங்களாக மின் கட்டணம்  செலுத்தவில்லை. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, மாநகாட்சி இளநிலை பொறியாளரிடம், மின் கட்டணம் செலுத்தாமல் 3 கட்டிடமும் இருண்டு கிடக்கிறது. இதனால், குழந்தைகள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, உடனடியாக மின் இணைப்பு கொடுக்க  நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இதுதொடர்பாக யாரிடம் புகார் அளிப்பது என தெரியாமல் மக்கள் புலம்புகின்றனர்.

Related Stories: