கோடைக்கு ஏற்ற குளிர்ச்சி பானங்கள் 3!

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி - 1 கப்

குளிர்ந்த  பால் - 1 டம்ளர்

சர்க்கரை - 5 தேக்கரண்டி

வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் -  ஒரு ஸ்கூப்.

செய்முறை:  சுத்தம்   செய்த  ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன்  சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பின்னர், ஸ்ட்ராபெர்ரி விழுதுடன் ஒரு டம்ளர் குளிர்ந்த பால் சேர்த்து அதனுடன்  ஏதாவது ஒரு ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப் சேர்த்து ஒரு சுற்று சுற்றி  எடுத்தால் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார்.

பயன்கள்: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

மேலும், ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும் ஏராளமான நார்ச்சத்துகளும் நிறைந்தது.  இதனை  கோடைகாலத்தில், அடிக்கடி  மில்க் ஷேக்  செய்து அருந்தி வர, உடலுக்கு  புத்துணர்ச்சி அளிப்பதோடு, ஆரோக்கியமாகவும்  வைக்க உதவுகிறது.  குழந்தைகளுக்கு இதனை காலை உணவாகவும் சாப்பிடக் கொடுக்கலாம்.

கேரட், வெள்ளரிக்காய்,  ஆரஞ்சு ஜூஸ்

தேவையான பொருட்கள்

கேரட் - 2

வெள்ளரிக்காய் - பாதியளவு

ஆரஞ்சு - 1

சர்க்கரை  - அரை கப்

தண்ணீர்  - 1 டம்ளர்.

செய்முறை: கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  அதனுடன்,  சிறிது உப்பு, தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து  மிக்ஸியில் நன்கு  அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர்,  ஜூஸை நன்கு வடிகட்டி விட்டு  பரிமாறவும்.  சர்க்கரை  விரும்பாதவர்கள்  ஜூஸை  வடிகட்டிய பின், தேன் கலந்து  குடிக்கலாம். சுவையாகவும்  ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பயன்கள்: கேரட்டில், கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.  வெள்ளரிக்காயில் நீர் சத்து  அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால் கோடையில்  உடலை  குளிர்ச்சியாக  வைத்திருக்க உதவுகிறது. மேலும், வெள்ளரிக்காய்  இன்சுலின் சுரப்பிற்கும்  உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் உற்பத்தியைப் பராமரிக்கின்றன. மேலும்,  உடலை  குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. எனவே, வெயில் காலத்தில் அனைவரும் அருந்த உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானது.

கசகசா  கீர்

தேவையான பொருட்கள்:

கசகசா விதை - 2 தேக்கரண்டி

வெல்லம்-  ¼ கிலோ

தேங்காய் -  அரை மூட்டி

முந்திரி - 8-10

கிஸ்மிஸ் -  தேவையான அளவு

நெய் - 2 தேக்கரண்டி

தண்ணீர்-  2 டம்ளர்

ஏலக்காய் - 4.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து முதலில் வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும். பின்னர், கசகசா, முந்திரி, ஃப்ரஷ்ஷாக துருவி அரைத்த தேங்காய் மற்றும் ஏலக்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல மைய அரைக்க வேண்டும். பின்பு வெல்லப்பாகில் இந்த அரைத்த கசகசா விழுதைச் சேர்த்து கொதி வரும் வரை வேகவைக்க வேண்டும். கசகசா  கீர், பாயசம்  பதத்துக்கு  வந்ததும் இறக்கிவிட வேண்டும்.  பின்னர், முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில்  வறுத்து  சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.  சுவையான ஆரோக்கியமான கசகசா கீர் தயார்.

பயன்கள்:
பாப்பி விதைகள் எனும்  கசகசாவில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கசகசா உடலுக்கு  குளிர்ச்சியை  தருகிறது. இதனை கோடைக்காலத்தில் அடிக்கடி பாலுடன்  கலந்து  அருந்தி வர , உடல் குளிர்ச்சி பெறும். மேலும்,  இந்த கசகசா கீர் இரவில் அருந்த  நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. இது இந்திய கர்நாடக மாநிலத்தின் கிளாசிக் உணவு வகைகளில் ஒன்றாகும்.

தொகுப்பு : தவநிதி

Related Stories: