கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் குப்பை தொட்டியாக மாறிய ஓடை

அருப்புக்கோட்டை, டிச.5: செவல் கண்மாய்க்கு செல்லும் ஓடை குப்பை கொட்டி அடைக்கப்பட்டுள்ளது. ஓடையை உடனே தூர்வார வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் நெசவாளர் காலனி, அன்புநகர் என 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.  அன்புநகர் 1வது தெருவில் வாறுகால், ரோடு வசதி இல்லை.  நகராட்சி மூலம் வாறுகால், ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.  தெருவின் இருபக்கமும் வாறுகால் அமைக்கும் பணி நடந்து வந்தது.  சில வீடுகள் முன்பு 3 அடி வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் வாறுகால் கட்டும் பணி பாதியில் நிற்கிறது.  வாறுகால் கட்டும் பணி முழுமை அடைந்த பிறகு தான் ரோடு அமைக்கும் பணி நடக்கும்.  ஆக்கிரமிப்பை அகற்ற பொறியியல் பிரிவில் இருந்து நகரமைப்பு பிரிவிற்கு எடுத்துச் சொல்லியும் அலுவலர்கள் மெத்தனம் காட்டுகின்றனர்.

இதனால் வாறுகால், ரோடு அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.   விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகளை தொடங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் அன்புநகர் 12வது தெருவில்  ரோடு மற்றும் வாறுகால் வசதி இல்லை.  மழைக் காலங்களில் தண்ணீர் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. ரோடு போடுமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.  இந்த வார்டில் பாலையம்பட்டி பகுதியில் மழை பெய்தால் காட்டுப்பகுதி வழியாக செவல் கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடைகள் தூர்வாரப்படாமலும் முட்புதர்களும், செடிகளும் வளர்ந்துள்ளன. எனவே ஓடையை தூர்வார வேண்டும்.

 மேலும் இந்த வார்டில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது.  இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இவர்கள் சைக்கிள்களை நிறுத்த இடமில்லை. பள்ளிக்கு வெளியே வெயிலிலும், மழையிலும் சைக்கிள்கள் காய்ந்து வருகின்றன.  பள்ளியின் பின்புறம் ஆய்வகத்திற்காக கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது செயல்படாமல் உள்ளது. இங்கு சைக்கிள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: