ங போல் வளை-யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சால மிகுத்துப் பெயின் INFORMATION FATIQUE SYNDROME

முன்னரெல்லாம் நமது கிராமத்துப் பாட்டிகள் இடுப்பில் செருகிய சுருக்குப்பையில் இருந்து பாக்கு, சிறிது சில்லறைகள், காய்ந்த வெற்றிலை, மேலும் அவர்களுக்கே உரித்தான சில பொருட்கள் இருக்கும். இந்த பை எல்லா நேரத்திலும் அவர்களுடனே இருக்கும். அப்படி ஒரு சுருக்குப்பை நம் அனைவரிடமும் இன்றும் இருக்கிறது. எல்லா நேரத்திலும் நம்முடன் ஒட்டிக்கொண்டே உள்ளது. ஆனால் அதனுள் பாட்டியின் பொருட்களைவிட லட்சம் மடங்கு தகவல்கள் பொதிந்து இருக்கிறது. அதற்கு பெயர் ‘மொபைல் போன்.

பாட்டிக்கோ தேவையான பொருட்கள் மட்டுமே இருந்தது. ஆனால், நமது கைபேசியில் உலகமே கொட்டிக்கிடப்பதால், எது முக்கியமானது? எது தேவையற்றது? என்கிற தெளிவு நம்மில் பலருக்கு இருப்பதில்லை. ஆகவே, சுருக்குப்பையைவிட கைபேசி ஆயிரம் மடங்கு எடை மிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. உங்கள் கைபேசியில் குறைந்தது பத்து முதல் பதினைந்து செயலிகள் இருக்கின்றன. அதில் வாட்ஸாப் எனும் செயலியில் மட்டும் நீங்கள் குறைந்தது ஐந்து குழுமங்களில் இருக்கிறீர்கள். ஒரு நாளைக்கு நாம் ஒவ்வொருவரும் ஐம்பது தகவல்களையாவது பரிமாறிக்கொள்கிறோம். குறைந்தது நாற்பது நிமிடங்களாவது வாட்ஸாப் செயலியில் இருக்கிறோம்.

என்னிடம் நவீன கைபேசி இல்லை என்பவர்களுக்கு வேறு வகையில் தகவல்கள் வந்து குவிகிறது. தொலைக்காட்சியில் ஒரு நாளைக்கு எழுபது முதல் எண்பது விளம்பரங்களை நாம் காண நேர்கிறது. தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்பவர்களுக்கு, நண்பர்கள் மூலமாகவும், வானொலி, பத்திரிக்கை, போன்ற ஊடகங்கள் மூலமாகவும் குறைந்தது நூறு தகவல்களாவது வந்து சேர்கின்றன.இப்போது கேள்வி.

ஆம் அதனால் என்ன?

INFORMATION FATIGUE SYNDROME - எனும் தகவல்களால் உருவாகும் மூளைச்சோர்வு எனும் நோய்க்கூறு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் விளைவு.நமக்கு ஏற்படும் மனஅழுத்தங்களின் போது எப்படி மூளை பாதிக்கப்படுகிறதோ, அதற்கு இணையாகவோ அதைவிடக் கூடுதலாகவோ நமது மூளை பாதிப்படைவது, அதிகமான தகவல் சுமைகளால்தான்.

ஒரு தகவல் உள்ளே வரும்பொழுது நமது மூளை, அதைப் பல்வேறு கட்டங்களாகப் பகுத்து, சேமித்து வைத்துக்கொள்கிறது. தேவைப்படும் பொழுது, தனது அடுக்குகளிலிருந்து எடுத்து வெளிப்படுத்துகிறது. தகவல் சேகரிப்பு எனும் செயல்பாட்டின் பொழுது நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மூளை சிறிது சோர்வடைகிறது. நாம் மேலும் மேலுமென தொடர்ந்து இந்தச் செயல்பாட்டில் ஈடுபடும்பொழுது, மூளை சிறிது சிறிதாக சோர்வடைந்து இரவில் முற்றிலுமாக சோர்வடைந்து, நாம் தூங்கும் பொழுது, நாம் நாள் முழுவதும் சேர்த்த தகவல்களை முன்னும் பின்னுமாக சரியாக அடுக்கிவைக்கிறது. இந்த அடுக்கி வைக்கும் செயல்பாடு உள்ளே நடந்துகொண்டே இருப்பதால், நமது தூக்கம் ஆழ்ந்த தூக்கமாக இல்லாமல், கருவிழிகளில் சிறு நடுக்கமோ, அசைவோ இருக்கக்கூடிய பதட்டமான தூக்கமாகவே அமைகிறது.

தூக்கமின்மை எனும் முதல் கட்ட நோயை உருவாக்கும் இந்த தகவல் சேகரம், உடல் மற்றும் மனம் சார்ந்த பெரும்பாலான நோய்களை அடுத்தடுத்து கொண்டுவருகிறது. அப்படியென்றால் நாம் தகவல்கள் சேகரிப்பதை நிறுத்தி விடலாமா? அறிவு என்பது ஆபத்தான ஒன்றா? அடிப்படை அறிவு இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? என்றால் நரம்பியல் நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

உயிரினங்களிலேயே மிகவும் பலவீனமான மனித இனம், தகவல் பரிமாற்றம்மற்றும் கற்பனைத்திறன்களால் மட்டுமே, இந்த உலகத்தையும் , மற்ற உயிரினங்களையும் ஆள்கிறது என்கிறார் மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி. தகவல் பெருக்கம் எனும் நிலை காலத்திற்கேற்ப மனித வரலாற்றில் எப்போதும் இருந்தது தான், இன்று இணையமும், தொழில்நுட்பமும் அதை பல்கி பெருகச்செய்திருக்கிறது.

தகவல்களில் இரண்டு வகையான தகவல்களை நாம் அடைகிறோம். முதல் வகை அறிவார்ந்த தகவல்கள். உதாரணமாக நம்முடைய அலுவலகப் பணி சார்ந்த அறிவு, நாம் உபயோகிக்கும் பொருட்கள், செல்லும் இடங்கள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த அறிவு. இரண்டாவது வகை உணர்ச்சிகரமான, நமது உணர்வுகளுடன் தொடர்புடைய தகவல்கள், உதாரணமாக தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் போன்றோரின் ஆரோக்கியம் மற்றும் உடல் நிலை குறித்த தகவல்கள். இந்த இரண்டு வகை தகவல்களிலும், நமக்கு தேவையானது , தேவையற்றது என்கிற இரண்டு நிலை அறிவு வந்து சேர்கிறது. இந்த அறிவை வைத்து நாம் எண்ணங்களை பெருக்கிக்கொண்டே செல்கிறோம்.

அதனாலென்ன? என்கிற கேள்வி நமக்கு எழலாம். வள்ளுவர் சொல்வது மயிற்பீலியே ஆனாலும் அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் அச்சாணி முறிந்துவிடும் என்பது போல. ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்’சிறிய சிறிய தகவல்களாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால் அது பெரிய பக்கவிளைவுகளையே உண்டாக்கும். இதை யோக மரபு ‘சித்த விருத்தி’ என்கிறது. பதஞ்சலி தனது முதல் சூத்திரத்திலியே ‘யோகஹ சித்த விருத்தி நிரோதஹ’ என்கிறார்.

சதா ஓடிக்கொண்டிருக்கும் அல்லது பல்கி பருகிக்கொண்டிருக்கும் சித்தத்தின் செயல்பாட்டை நிறுத்துதலே யோகம் எனப்படும். இப்படி ஒரு மரபார்ந்த பார்வையும், அதற்கான பாடத்திட்டமும்தான் யோகத்துறையை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.ஒருவர் யோகப் பயிற்சிகளை படிப்படியாக கற்றுத் தேர்வதன் மூலம், உடலளவில் அடைந்த சமநிலை, மெதுவாக காலப்போக்கில் உள்ளத்தளவிலும், அமைகிறது. இதை ‘சித்த சுத்தி’ என்கிறது மரபு. அதாவது யோகத்தின் முதல் இலக்கே இந்த சித்த சுத்திதான். சுத்திகரிக்கப்பட்ட சித்தம், மிகவும் தேர்ந்த, நேர்நிலை மற்றும் ஆற்றலை வழங்கக்கூடிய எண்ணங்களை முதலில் தூண்டுகிறது.

இந்த நிலையை அடைந்த ஒருவர் தகவல்கள் சார்ந்த விசயத்தில் பதட்டத்தையோ, கொந்தளிப்பையோ அடையமாட்டார். ஒரு செய்தி அல்லது தகவல் என்பது செய்தியாக மட்டுமே உள்ளே செல்லும் தேவையற்ற கொந்தளிப்பை உருவாக்காது. அல்லது அந்த செய்தியின் மீது தனது கற்பனையை ஏற்றி வைத்து, எண்ணங்களை பெருக்கிக்கொள்ளாது.உதாரணமாக பயம் என்கிற உணர்வு மனிதனுக்கும், விலங்குகளுக்கும் சமமான ஒன்று. ஆனால், மனிதன் மனம், எண்ணங்கள் மற்றும் கற்பனைத்திறன், இருப்பதாலேயே, சாதாரண பயத்தை கற்பனை மூலம் பெருக்கிக்கொள்கிறான்.

செய்தித்தாளில் ‘ குளிர்சாதன பெட்டி வெடித்து தீப்பிடித்து ஒரு பெண் மரணம்‘ எனும் செய்தியை தனது பயம் மற்றும் கற்பனையின் மூலம் பெருக்கி, அந்த விபத்து தன் குடும்பத்தில் நடந்து விடுமோ? என பதட்டம் அடைகிறான். இது ஒரு உதாரணம்தான். இப்படிப் பெரும்பாலான செய்திகளை மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்வில் போட்டுப்பார்த்து, குழப்பிக்கொள்வது இங்கே சாதாரணமாக நடைபெறுகிறது.இதை சரியாக கையாளத்தான் ‘சித்த சுத்தி ‘ சார்ந்த பயிற்சிகள் ஒருவருக்கு உதவும்.

சித்த சுத்தி அடைந்த ஒருவர், அறிவு சேகரம் செய்வதையோ, அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடுவதையோ நிறுத்திவிட மாட்டார். ஒருவகையில் அவர் இன்னும் கூர்மையான மதி படைத்தவராக, ஆழ்ந்து வாசிக்கக்கூடியவராக, தனக்கான செய்திகளையும் தரவுகளையும் மட்டும் புத்தியில் வைத்துக்கொண்டு தேவையற்ற தரவுகளை அன்றாடம் அழித்து விடுபவராக மாறிவிடுகிறார்.யோக மரபில் ‘நாத யோகம்’ எனும் மாபெரும் கிளை ஒன்றுள்ளது. அதன் பயிற்சி திட்டங்கள் பெரும்பாலும் நம் அகத்தில் நிகழ்வதை நேரடியாக சமன் செய்யவும், நமது ஆழங்களை முற்றுணரவும், நிர்வகிக்கவும் ஏற்படுத்தப்பட்டவை.

அதாவது சப்தங்களை ஒரு முக்கியமான கருவியாகக் கொண்டு செய்யப்படும் பயிற்சிகள். சில சப்தங்கள் நம் ஆழம்வரை செல்லக்கூடியவை. ஆகவே, ஒவ்வொரு பாடலும் நமக்கு ஒவ்வொரு குணாதிசயத்தைத் தூண்டுகிறது, அல்லது நம் மனநிலைக்கு தக்க ஒரு இசையை நாம் கேட்க விரும்புகிறோம். இதை மேலும் பண்படுத்தி, பயிற்சிகளாக வடிவமைத்துள்ளது யோகமரபு.

உதாரணமாக, ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட மிக முக்கியமான பயிற்சியான ‘ப்ரம்மரி பிராணாயாமம்’ எனும் பயிற்சி, மூளையின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வகையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. படத்தில் இருப்பது போல அமர்ந்து கண்களையும் ,காதுகளையும் மூடிவிட்டு, மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சுக்காற்று வெளியே செல்லும்பொழுது தேனீயின் ரீங்காரம் போன்ற மெல்லிய சப்தத்துடன் முழுவதுமாக மூச்சை வெளியிட்ட பின், மீண்டும் மீண்டுமென பத்து முறை செய்து பார்க்கலாம். காலையில் ஒருமுறையும், இரவு தூங்குவதற்கு சற்று முன்னர் ஒருமுறையும் இதை தொடர்ந்து செய்து வரலாம்.

Related Stories: