8 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்குடி பகுதியில் சம்பா நடவில் களையெடுக்கும் பணி விவசாயிகள் தீவிரம்

ஆலங்குடி, டிச.5: ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குளத்து பாசனத்தை பயன்படுத்தி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நடவில் களையெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட  வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், பள்ளத்திவிடுதி, அரையப்பட்டி, வெண்ணாவல்குடி, மேலாத்தூர், கீழாத்தூர், கே.வி.கோட்டை ஆகிய பகுதிகளிலும், அதேபோல் கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை, நம்பன்பட்டி, தெற்குத்தெரு ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிரிட்டு   வருகின்றனர். இந்நிலையில், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் நெல்  பயிரிட்டு வந்தனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முற்றிலும் பொய்த்து போனதால் இப்பகுதியில் நீர்மட்டம் உயரவே இல்லை.  

இந்நிலையில்,  விவசாயிகள்  600 அடி முதல் 1200 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து சம்பா நெல் சாகுபடியில்ஈடுபட்டனர்.கடந்த சில மாதங்களாக அவ்வப்போது, மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால், குளம் மற்றும் கண்மாயில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இதனைப்பயன்படுத்தி ஆலங்குடி அருகேயுள்ள தவளைப் பள்ளத்தில் விதைப்பு மூலம் சம்பா நெல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பா நெல் வயலில் பெண்கள் மும்மரமாக களையெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து பெண்கள் கூறுகையில், தற்போது, சம்பா நடவில் அதிக அளவில் களைகள் உள்ளது. இதனால் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், அதிக அளவு மழை பெய்தால் மட்டுமே மகசூல் பெற முடியும். இல்லையேல் அனைத்து நெற்பயிர்களும் கருகி விடும். எனவே, மாவட்ட நிர்வாகம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், குளம் மற்றும் கண்மாய்களுக்கு செல்லும் வரத்து வாரிகளை சுத்தம் செய்தும், அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவதுடன், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: