கஜா புயலால் பாதிக்கப்பட்டோரின் சிரமம் குறைக்க 2017ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

அறந்தாங்கி, டிச.5: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், கடந்த ஆண்டிற்கு வழங்க வேண்டிய பயிர்காப்பீட்டு இழப்பீட்டு தொகை உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை காரணிகள், பூச்சி தாக்குதல் போன்ற இடையூறுகளால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப் பட்டது.பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டபோது, உரிய இழப்பீடு கிடைத்தது. இதனால் விவசாயிகள் சாகுபடியை தொடங்கிய உடனே பயிர்காப்பீடும் செய்து விடுகின்றனர்.இந்த நிலையில் அரசு துறையின் மூலம்  செயல்படுத்தப்பட்டு வந்த பயிர்காப்பீட்டு திட்டத்தை, தற்போதைய மத்திய அரசு சில மாறுதல்களை செய்து, தேசிய பயிர்காப்பீட்டு திட்டம் என்ற பெயரில், அதை செயல்படுத்தும் அமைப்பாக காப்பீட்டு நிறுவனங்களை நியமித்தது.அதன்படி கடந்த 2016ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டபோதிலும், இன்னும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது, சாப்பாட்டிற்கும்,மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும், இந்த வருடம் சாகுபடியின்போது, உரம், ச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்கும் பணம் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் இதுகுறித்து திட்டகுடியைச் சேர்ந்த விவசாயி முத்துராமன் கூறியதாவது:

கடந்த ஆண்டிற்கான பயிர்காப்பீட்டு இழப்பீட்டு தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டதற்கு விரைவில் வழங்கப்படும் என்றார். ஆனால் அவர்கள் தெரிவித்து ஒரு மாதத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில் கஜா புயலால் நாங்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ள நிலையில், தற்போது பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை கிடைத்தால், எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார். தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நலனை காக்க கொண்டு வரப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த ஆண்டு சாகுபடி பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச்  சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உடனே வழங்கினால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: