திருவண்ணாமலையில் பரபரப்பு கந்துவட்டி கொடுமையால் காவல் நிலையத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை அருகே கந்துவட்டி கொடுமையால் காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கந்துவட்டி வசூலிப்பதாக தலைமை காவலர் மீது புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது. திருவண்ணாமலை அடுத்த சம்மந்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(30). இவரது மனைவி தீபா(28). இவர்களுக்கு ஒரு ஆண் குழுந்தை உள்ளது. திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் ராஜீவ்காந்தி மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ்காந்திக்கு பணம் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலையை சேர்ந்த திருஞானமூர்த்தி என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 ஆயிரம் கடனாக பணம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மாதந்தோறும் ராஜீவ்காந்தி 1,500 செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் செலுத்த வேண்டிய தொகையை ராஜீவ்காந்தியால் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பணம் கொடுத்த திருஞானமூர்த்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜீவ்காந்தியின் கடைக்கு சென்று தன்னிடமிருந்து பெற்ற

15 ஆயிரம் அசல் தொகையினை உடனடியாக தரவேண்டும் என கூறினாராம். அப்போது ராஜீவ்காந்தி நான் தான் மாதம்தோறும் தவணை செலுத்தி வந்துள்ளேன். அதுபோக மீதமுள்ள பணத்தை தான் தரவேண்டி உள்ளது. ஆனால் நீங்கள் 15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறுகிறீர்களே என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருஞானமூர்த்தி என்னிடமிருந்து பெற்ற தொகையை முழுவதும் கொடுத்துவிட்டு கடையை திறக்க வேண்டும் எனக்கூறி கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ராஜீவ்காந்தி நேற்று தனது மனைவியுடன் திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது, காவல் நிலைய வளாகத்திற்குள் வந்த தம்பதி கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து இருவரும் தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்து கேனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கந்துவட்டி கேட்டு மிரட்டிய திருஞானமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. குற்றத்தை தடுக்கும் காவல் அதிகாரியே கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: