குரூப்2 தேர்வில் வெற்றிபெற்ற உதவி ஜெயிலர் பணி துறப்பு 3 உதவி ஜெயிலர்களுக்கு ஆப்காவில் மீண்டும் பயிற்சி

வேலூர், டிச.5: வேலூர் ஆப்காவில் 9 மாத பயிற்சிக்கு காலதாமதமாக வந்த 3 உதவி ஜெயிலர்களுக்கு ஆப்காவில் மீண்டும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் குரூப் 2 தேர்வில் தகுதி பெற்ற உதவி ஜெயிலர் ஒருவர் பணியை துறந்துவிட்டு சென்றார். வேலூரில் சிறை மற்றும் சீர்த்திருத்த நிர்வாக பயிற்சி மைய(ஆப்கா)த்தில் தமிழக சிறைகளில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 67 பேருக்கு 9 மாத பயிற்சி கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கியது. இந்த பயிற்சியில் சிறை நிர்வாகம், கைதிகளை கையாளும் முறை, சட்ட விதிமுறை, கவாத்து, துப்பாக்கி கையாளும் முறைகள், கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முறை, அலுவலக பதிவு கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இவர்களுக்கு 9 மாத பயிற்சி நிறைவு கடந்த 30ம் தேதி நடந்தது. இதையடுத்து 67 பேருக்கும் திருச்சியில் ஒரு மாத களப்பணி கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த களப்பணியில் 63 உதவி ஜெயிலர்கள் மட்டுமே திருச்சி மத்திய சிறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். 9 மாத பயிற்சியில் காலதாமதமாக வந்து கலந்து கொண்ட 3 உதவி ஜெயிலர்களுக்கு ஆப்காவில் காலதாமதமாக வந்த நாட்களுக்கான பயிற்சி மீண்டும் தொடங்கியது. இப்பயிற்சியை முடித்து திருச்சி சிறையில் ஒரு மாத களப்பணி செய்ய உள்ளனர். மேலும் உதவி ெஜயிலராக தேர்ச்சி பெற்றவர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் குரூப் 2 தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதால், அவர் உதவி ஜெயிலர் பணியை துறந்துவிட்டு, குரூப் 2 பணிக்கு சென்று விட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: