வேலூர், திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் 730 டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு பொதுமக்கள் பாதிப்பு

வேலூர், டிச.5: வேலூர், திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 730 டாக்டர்கள் நேற்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு அண்டை மாநிலங்களில் வழங்குவதுபோல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 15 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே பதவி உயர்வு என்கிற நிலையை மாற்றி 13 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், டாக்டர்களுக்கான பணப்படியை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 அரசு மருத்துவமனை டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் பணியை நேற்று புறக்கணித்தனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை, 11 தாலுகா மருத்துவமனைகள், 100 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் 600 டாக்டர்கள் நேற்று புறநோயாளிகள் சிகிச்சைப் பணியை புறக்கணித்தனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒருசிலர் நோயின் தீவிரம் தாளமுடியாமல் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்றனர். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் பணி இருந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் புறக்கணித்தனர். இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை வழக்கம்போல் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்தனர். அப்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமான பொதுமக்கள் பலமணிநேரம் மருத்துவமனையில் காத்திருந்து சிகிச்சை பெற்றுச் சென்றனர். வாலாஜா அரசு மருத்துவமனையில் 10 டாக்டர்களும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 7 டாக்டர்களும் மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு பணிகளை புறக்கணித்தனர். இதேபோல், அரக்கோணம், ஆற்காடு, குடியாத்தம், ஆம்பூர், நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரபரப்புடன் காணப்பட்டு வந்த புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நேற்று பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 பெண் டாக்டர்கள் உட்பட 130 டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பணிகளை புறக்கணித்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் பணி புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே தகவல் வெளியானதால் நேற்று மருத்துவமனைக்கு பொதுமக்கள் வரவில்லை. இதனால் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் பரிதவிப்பிற்கு ஆளாகினர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர் சந்திரபாபு கூறுகையில், ‘அரசு மருத்துவமனை டாக்டர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து நேற்று ஒருநாள் புறநோயாளிகள் சிகிச்சைப் பணிகளை டாக்டர்கள் புறக்கணித்தனர். இதில் வேலூர், திருப்பத்தூர் சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த 600 டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக வரும் 13ம் தேதி மீண்டும் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சைப்பணி புறக்கணிப்பு நடைபெறும். அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காவிட்டால் 27, 28, 29 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Related Stories: