வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மகன் ₹5.10 லட்சம் மோசடி

வேலூர், டிச.5: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மகன் 5.10 லட்சம் மோசடி செய்ததாக திருச்சி, சேலம் வாலிபர்கள் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். திருச்சி புள்ளம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாருண்ய பிரபு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் ஐடிஐ படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தேன். இதற்கிடையில் வேலூர் மாவட்டம் கொணவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரின் மகன் வசந்தராஜன் அறிமுகமானார்.

அவர் என்னிடத்தில் நான் வெளிநாட்டில் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறினார். அதற்கு சுமார் 2.75 லட்சம் செலவாகும் என்று கூறினார். நானும் அதை நம்பி ₹2.75 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். பணத்தை கொடுத்து பல மாதங்களாகியும் கூறியபடி வேலை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து கேட்டால் சரியான பதிலும் அளிப்பதில்லை. எனவே எனது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் பிஇ படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த வசந்தராஜன் அறிமுகமானார். அவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2.35 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டார்.

பணத்தை கொடுத்து பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தரவில்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து 2.35 லட்சம் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 2 பேரிடமும் சேர்த்து மொத்தம் 5.10 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Related Stories: