லோயர்கேம்ப் அருகே இலவம் தோப்பில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

கூடலூர். டிச. 4: லோயர்கேம்ப் அருகே இலவம் மரத்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் நகராட்சியின் 21வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் மலையடிவாரத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, மா, இலவம் மரங்களை சாகுடி செய்துள்ளனர். விவசாய நிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளட்ட பல வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இப்பகுதியிலுள்ள வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கொடுத்த புகாரின் போரில் வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் தொழு, எள்கரடு, பளியன்குடி ஆகிய இடங்களில் மட்டும் குறிப்பிட்ட தூரம் வரை அகழிகள் அமைத்தனர். தற்போது அகழிகள் சேதம் அடைந்து மண்மேவி உள்ளது. இதனால் வனவிலங்குகள் விளை நிலங்களில் புகுந்து வாழை, தென்னை, இலவம் மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு கூடலூர் வனச்சரகம் நாயக்கர் தொழு, சரளை மேடு புலம் பகுதியில் பெருமாயி (48) என்பவருடைய இலவம் மரத்தோப்பிற்குள் புகுந்த யானைக்கூட்டம் இலவம் மரங்களை வேருடன் சாய்த்தும், மரங்களில் உள்ள பட்டைகளை உறித்து தின்று சேதப்படுத்தி விட்டு அதிகாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை நேற்று வனத்துறையினர் பார்வையிட்டனர். யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளர். மேலும் விவசாய நிலத்தை ஒட்டிய வன எல்லைப்பகுதியில் அகழியோ, மின்வேலியோ அமைக்கவேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: