நெல்லியாளத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

பந்தலூர், டிச.4:  நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை பந்தலூர் இன்கோமேடு காலனி   பெண்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 பந்தலூர் இன்கோமேடு காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதன் மூலம் வீடுகள் கட்டி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதிக்கு நடைபாதை, குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் வரமுடியாத நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தொட்டில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இங்கு அடிப்படை வசதி செய்து தர இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்காததால் நேற்று இப்பகுதி பெண்கள் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.  இதுகுறித்து நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி அப்பகுதிக்கு அடிப்படை வசதி மற்றும் சாலைவசதி செய்துதர நடவடிக்கை எடுக்கப்படுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: