பராமரிப்பு இல்லாத கல்லட்டி மாடம் சமூக விரோதிகளின் கூடாரமாகிறது

ஊட்டி, டிச. 4: ஊட்டியில்  இருந்து மசினகுடி மற்றும் முதுமலைக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக  செல்லலாம். இச்சாலையில் செல்லும் போது, கல்லட்டி பகுதியில் நீர்  வீழ்ச்சியும், அதன் அருகே ஒரு பார்வையாளர்கள் மாடமும் உள்ளது. அதனை சுற்றி  சிறிய பூங்காவும் இருந்தது. முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு  சென்று புகைப்படம் எடுத்துச் செல்வது வழக்கம். அதேபோல், அங்கு சிறிது நேரம்  அமர்ந்து உணவு உட்க்கொள்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

வனத்துறை  கட்டுப்பாட்டில் இருந்த இந்த பார்வையாளர்கள் மாடம் மற்றும் பூங்கா கடந்த  சில ஆண்டுகளுக்கு முன் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், நாளடைவில்,  இந்த பூங்காவையும் பராமரிக்கவில்லை. பார்வையாளர்கள் மாடத்தையும்  வனத்துறையினர் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால், இந்த  பார்வையாளர்கள் மாடம் மற்றும் அங்குள்ள சிறிய பூங்கா முழுக்க புதர் மண்டி  கிடக்கிறது. இதனால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அச்சப்படுகின்றனர்.  

மேலும், இந்த பார்வையாளர்கள் மாடத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கும்  நிலையில், அது சமூக வீரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. மாலை 6 மணிக்கு  மேல் இப்பகுதிக்கு செல்லும் சிலர் அதனை திறந்தவெளி பாராக மாற்றி  வருகின்றனர். எனவே, இந்த பார்வையாளர்கள் மாடத்தை சீரமைக்க வேண்டும்.  என பொதுமக்கள்  மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: