சீசனுக்கு தயராகும் பூங்காக்கள் மலர் நாற்றுகள் உற்பத்தி தீவிரம்

ஊட்டி, டிச. 4: ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெயிலை தாங்க முடியாமல் குளுமையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பது வாடிக்கை. இச்சமயங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை அனைத்து பூங்காக்களில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகளை முன்னதாகவே நட்டு விடும்.

மேலும், தமிழகம் மாளிகை பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் புதிதாக, அதே சமயம் பல வகையான மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கம். இதற்காக ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாற்று உற்பத்தி செய்யப்படும்.

நாற்றுகள் உற்பத்தியானவுடன் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடவு பணிகள் துவங்கும். பின், இந்த மலர் செடிகள், ரகம் மற்றும் பூக்கும் காலத்திற்கு ஏற்றவாறு மார்ச் மாதம் வரை நடவு பணிகள் நடக்கும்.

இதற்காக, தற்போது நாற்று உற்பத்தியில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பல வகையான மலர் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இம்மாதம் இறுதியில் நடவு பணிகள் துவக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தன

Related Stories: