தண்டராம்பட்டு அருகே பரபரப்பு சாலையோர பள்ளத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்து 6 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்

தண்டராம்பட்டு, நவ.30: தண்டராம்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்து 6 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சின்னையன் பேட்டை கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் காமராஜ்(40) பள்ளி பஸ்சில் வழக்கம்போல் வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்து வந்தார். வேப்பூர் செக்கடி பெருமாள் கோயில் வளைவு பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மாணவிகள் சவுந்தர்யா(5), மாலதி(6), சபிதா(7), கனிஷ்கா(5), ஷாலினி(4), மாணவன் வெற்றிவேல்(3) மற்றும் டிரைவர் காமராஜ்(40) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மற்றும் மாணவர்களை மீட்டு, சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாணவி சபிதா மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: