எலும்பு முறிவு எப்படிக் கண்டறியலாம்... என்ன செய்யலாம்?

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் வலிமைக்கு மட்டுமல்ல... உடல் அமைப்புக்குமே எலும்புகள்தாம் அடித்தளம். சில நேரங்களில் எலும்புகளில் ஏற்படும் முறிவு, ஆளையே முடக்கிப்போடும் அளவுக்குக் கொண்டு போய்விடும். சிலர் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது எலும்புமுறிவா, சுளுக்கா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமலேயே எண்ணெய் தடவி உருவிவிடுவது, சூடான பொருள்களால் ஒத்தடம் கொடுப்பது என சுய வைத்தியம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆபத்தானது.

‘எலும்புமுறிவைச் சரியாக அடையாளம் காணாமல் அலட்சியமாக இருப்பதும், சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதும் பிரச்னை தீவிரமாவதற்கு முக்கியக் காரணம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எலும்புமுறிவு ஏற்பட்டால், அதை எப்படி அடையாளம் காண்பது... அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

தாங்கக்கூடிய அளவுக்கும் அதிகமான ஆற்றல் அல்லது அழுத்தத்துக்கு உள்ளாகும்போது எலும்பில் முறிவு ஏற்படுகிறது. எலும்புமுறிவு என்பது, சருமத்துக்குள்ளேயே ஒரு மெல்லிய கீறலாக இருக்கலாம், பல துண்டுகளாக உடையலாம் அல்லது முற்றிலும் நொறுங்கிப்போகலாம்.

எப்படி அறிந்துகொள்வது?

சருமத்தைக் கிழித்துக்கொண்டு எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு நிற்பது போன்ற பெரிய அளவிலான எலும்புமுறிவை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். சருமத்துக்குள் ஏற்பட்டிருக்கும் எலும்புமுறிவையும் சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக, அடிபட்ட இடத்தில் தாங்க முடியாத அளவுக்குக் கடுமையான வலியும் வீக்கமும் இருக்கலாம்; பாதிக்கப்பட்ட பகுதி முற்றிலும் அசைக்க முடியாமல் வளைந்து காணப்படலாம்; அதோடு சிதைந்தநிலையிலும் ரத்தக்கசிவுடனும் இருந்தால், அது எலும்புமுறிவாக இருக்கலாம்.

சில நேரங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் கை அல்லது கால் விரல்கள் மரத்துப்போய் நிறமாற்றம் ஏற்பட்டிருப்பதும் எலும்புமுறிவுக்கான அறிகுறியாக இருக்கலாம். மூட்டிலிருந்து எலும்பு விலகுவதும் கூட எலும்புமுறிவைப்போலவே வலியை ஏற்படுத்தும். எனவே, ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது எலும்புமுறிவா என்பதை எக்ஸ்ரே, சிடிஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்ற மருத்துவப் பரிசோதனைகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

எலும்புமுறிவு - எப்படிக் கண்டறியலாம்.... என்ன செய்யலாம்?

எலும்புமுறிவு ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

*அடிபட்ட இடத்தில் எலும்புமுறிவுக்கான அறிகுறிகள் இருந்தால், அந்த இடத்தில் தேய்த்துவிடக்கூடாது. முறிந்த எலும்பை பழையபடி பொருத்துவதோ, உள்ளே தள்ளி அமுக்குவதோ ஆபத்தில் முடியலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக நேராக்கும் முயற்சியில் ஈடுபடுவது பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

*எலும்புமுறிவு ஏற்பட்ட இடத்தில் எண்ணெய் தடவி உருவிவிடுவதோ சூடான பொருள்களால் ஒத்தடம் கொடுப்பதோ கூடாது.

*வீக்கம், வலியைக் குறைக்க பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் கட்டியை நேரடியாக சருமம் அல்லது திறந்த காயத்தின் மீது வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*எலும்புமுறிவுக்காகப் போடப்பட்ட கட்டைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். கட்டுப்போட்ட இடத்தில் நீர்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் பட்டால் தொற்று ஏற்படலாம். மேலும், கட்டுப்போடப்பட்ட இடத்தினருகே லோஷன், பவுடர் போன்றவற்றைப் பூசினால் பாக்டீரியா வளர வழிவகுத்துவிடும்.

*எலும்புமுறிவு ஏற்பட்ட முதல் மூன்று வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முறிவு ஏற்பட்ட பகுதி எதன்மீதும் மோதிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முறிவடைந்த எலும்பின் மீது அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் மெதுவாகவும் மிருதுவாகவும் அசைவுகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டால், மற்றொரு காலின் உதவியுடன் நடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காலால் நடக்கக் கூடாது. கையில் முறிவு ஏற்பட்டிருந்தால், 90 டிகிரி கோணத்தில் நெஞ்சுப் பகுதியுடன் சேர்த்துக் கட்டுப்போட வேண்டும். எந்தப் பொருளையும் தூக்கக்கூடாது.

*உடைந்த எலும்புப் பகுதியை எப்போதும் உயர்த்திவைத்திருப்பது நல்லது. அமர்ந்திருக்கும்போதோ அல்லது தூங்கும்போதோ பாதிக்கப்பட்ட பகுதியை உயர்த்திவைக்க, தலையணையைப் பயன்படுத்தலாம்.

*எலும்புமுறிவு ஏற்பட்டவர்களுக்குக் கடுமையான காய்ச்சல் (101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக) இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

*எலும்புமுறிவு ஏற்பட்ட காலத்தில் மருத்துவர் பரிந்துரைத்தபடி  மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பால், முட்டை மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

*கை அல்லது காலில் கட்டுப்போட்டிருந்தால், முறிவடைந்த எலும்பின் அருகேயிருக்கும் தசைப்பகுதிகளை எப்போது அசைக்கலாம் என்று மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சிகிச்சைக்குப் பிறகு சிலரால் இயல்பாக இயங்க முடியாமல் போகலாம்.

எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் பரிந்துரைத்தால், பிசியோதெரபி பயிற்சி பெற வேண்டும். பொதுவாக, எலும்புமுறிவு ஏற்பட்டதும், சிகிச்சையில் சரியான முறையில் அதை இணைத்துவிட்டாலே எலும்பு இயற்கையாகவே கூடிவிடும். இளம் வயதினராக இருந்தால் முறிந்த எலும்புகள் விரைவில் கூடிவிடும். முதியவர்களென்றால், நீண்ட நாள்கள் ஆகலாம்.

சில நேரங்களில் எலும்புகள், ஒன்று சேராது என்பதால், அதைக் கண்டறிந்து அறுவைசிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டும். மூட்டுப் பகுதிக்கு மேல் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தால், மாவுக்கட்டு, மாத்திரை, மருந்துகள் போதும். கணுக்கால், முழங்கால், கை, இடுப்பு போன்ற எலும்புகள் இணையும் பகுதிகளில் அடிபட்டிருந்தால், அறுவை சிகிச்சைதான் தீர்வு. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து எத்தகைய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மருத்துவர் முடிவுசெய்வார்.

 

விபத்து அல்லது படுகாயம் ஏற்படும் நேரங்களில்...

சாலை விபத்து போன்ற நேரங்களில் படுகாயமுற்ற ஒருவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தால், அடிபட்ட இடத்திலுள்ள மேலாடைகளை சுயமாகக் கழற்ற அனுமதிக்கக் கூடாது. அந்த ஆடையை வெட்டி நீக்கலாம். ஏனென்றால், மேலாடையை அகற்றும்போது உடல் அசைவதால் மேலும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

பாதிப்புக்குள்ளான எலும்பையோ, அந்தப் பகுதியையோ சுயமாக அசைக்க முயலக் கூடாது. குறிப்பாக, யாருடைய உதவியும் இல்லாமல் உடைந்த எலும்பை அசைக்க முயல வேண்டாம். உதாரணமாக, உடைந்த கைகால்கள் அசையாமலிருக்க நீளமான ஸ்கேல், குச்சியால் கட்டிவிட்டு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். கட்டுப்போடும்போது அதிக அழுத்தம் கொடுத்தும் கட்டக்கூடாது.

தொகுப்பு : லயா

Related Stories: