125 கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு

கரூர்,நவ.28: கரூர் மாவட்டத்தில் 125 கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படும் என வேளாண் அலுவலர் கூறினார். கரூரில் அரவை முருங்கை நாட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. செல்வராஜ் தலைமை வகித்தார். பன்னீர்செல்வம், சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் வணிகம் துணை இயக்குனர் வளர்மதி, தோட்டக்கலை உதவி இயக்குனர் நடராஜன், அரவக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் (பொ)தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 செல்வராஜ் பேசுகையில், பனை மரங்களை அதிக அளவில் நடவேண்டும். இதன் மூலம் இயற்கை பேரிடரில் இருந்து காக்கும். மேலும் மழை பொழிவையும் அளிக்கும். அனைத்து ஊர்களிலும் ஆலமரம் வளர்க்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்து அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். பிறந்த நாள் மற்றும் நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை நடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.  கரூர் வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி பேசியது: விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற முன்வர வேண்டும். முருங்கைக்காயை பவுடராக தயாரிக்க முன்வர வேண்டும். அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற முன்வர வேண்டும். இதற்கு விவசாயிகள் ஒன்றுசேர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவக்கவேண்டும். கரூர் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணைய குழுக்கள் 125 உருவாக்கப்பட உள்ளது.

மதிப்புக்கூட்டும் விதமாக இயந்திரங்களை நிறுவ ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். எண்ணை உற்பத்தி போன்றவற்றில் விவசாயிகளே நேரடியாக ஈடுபட வேண்டும். இடுபொருட்களை வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக விவசாயிகளே இடுபொருட்களை வழங்குவதால் செலவும் குறையும் என்றார்.  கூட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் மையம் ஏற்படுத்துவது, முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. வேளாண். அலுவலர் தகவல்

Related Stories: