சிறுகதை -அமானுஷ்யம்

நன்றி குங்குமம் தோழி

அப்போதுதான் அங்கே அந்த அமானுஷ்ய சக்தி வந்தது தெரிந்தது. பகலின் தேய்பிறை, இரவின் வளர்பிறை சேர்ந்த அந்த அந்தி மாலைப் பொழுதில்தான் அது நேர்ந்தது. ஏதோ ஓர் அற்பமான காரணம் சொல்லி ஆபீசிலிருந்து சீனிவாசன் அன்று கொஞ்சம் சீக்கிரம் வீடு வர, எப்போதும் போல் கைகளில் முறுக்கு, தட்டை போன்ற மற்ற சொச்ச பதார்த்தங்கள் சகிதம் மீனு என்ற மீனா எனும் மீனாட்சி, காணொளியின் முன் சுவஸ்தமாக அமர்ந்து நடு நிசி அலறல் எனும் விறு விறுப்புத் தொடரில் மூழ்கி இருக்க....

 “மீனா... தலைவலி தாங்கலை.... ஒரு வாய் காபி போடறியா...?” பேய் பிடித்த சிறுமியின் அலறலில் உறைந்து அமர்ந்திருந்த மீனாட்சிக்குக் காது கேட்காமல் இருந்திருக்கலாம், அல்லது கேட்டும் கேட்காதிருந்திருக்கலாம்.... “மீனு...மீனும்மா.....” “ஒரு நிமிடம் ஒருத்தியை தனக்குப்பிடித்ததை செய்ய விட்டால் சாப்பாடு செறிக்காது.... இதோ போகிறேன்... விளம்பரம் தானே என்று சானலை மாற்றவேண்டாம்... ஒரு நொடி வந்துடுவேன்...” அந்த ஒரு நொடி அவனுக்குக் கிடைக்கப்போகும் காபியின் தரத்தை நிலுவையில் வைத்தது.

அதே நொடி அங்கு ஏற்படப்போகும் அபாயத்திற்கும் சங்கு மணி அடித்தது. சோபாவில் ஓர் ஓரமாக அடங்கி மடங்கி அமர்ந்திருந்த சீனிவாசன் , காபி வருவதற்குள் நேரத்தைக் கடத்துவது எப்படி எனும் யோசனையில் தலையில் இருக்கும் வெகு சில முடிகளைக் களைந்தபடி யோசனையில் இருக்க.....

“டமால்....”

சத்தம் கேட்டது போலவும் இருந்தது... கேட்காதது போலவும் இருந்தது. இது சாதாரணமாக மீனு கோபத்தில் கீழே போட்டு உடைக்கும் சாமான்கள் சத்தம் போல் இல்லை. இருந்தாலும் உள்ளே ஒரு பார்வை பார்த்தான். இல்லை அது இல்லை. ஒரு வேளை இரவில் மீனு போடும் அபாய வாயுவின் வெளியேற்றம் இந்த முறுக்கு தட்டையினால் சில பல மணி நேரம் முன் தங்கி வந்திருக்குமோ...? இருக்கலாம்....ஆனால் இதைக் கேட்டு அறிந்து கொள்ளும் மன திடம் அவ்வளவாக அவனிடம் இல்லாமல் போனதால்.... ஒரு குஸ்ஸாவாக அவளைப்பார்த்தபடி அமர்ந்திருந்தான்... “அய்யோ... என்ன செஞ்சீங்க.... தரையில் இருந்து இப்படிப் புகை....” அவன் அமர்ந்திருந்த சோபாவிற்கு மிக அருகில், தரையில் இருந்து புகை எழும்பி மெதுவாக மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

“என்ன... ஏது.... எதனால்...???” இந்த காணொளியின் தாக்கங்கள் இப்போது எல்லார் மீதும் பார்க்க முடிகிறது. இல்லையென்றால் அய்யோ எனும் ஒரு அலறல் சீனிவாசனின் மனோ நிலையை அறிவித்திருக்கும். அதை விடுத்து.... இப்பேர்பட்ட கேள்வியிலேயே சஸ்பென்ஸ் மாலைகட்டி வார்த்தைகள் வந்திருக்காது...

“கேள்வி கேட்டுண்டு... எழுந்து இந்தப்பக்கம் வந்துடுங்கோ...”

சற்றே அதிக தூரம் சென்று இருவரும் பார்த்தார்கள்...

அழகிய மார்பிள் தரையில் சின்னதாக மயிர் இழையவிட மெலிதாக ஒரு வெடிப்பு. அதன் உள்ளிருந்து புகை அதி மெதுவாக இசைந்து கொண்டிருந்தது. காணொளியில் சிறுமி பேயைப்பார்க்கும் காட்சி. கருநீலத்தில் வாயைச் சுற்றி பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டு, வெள்ளை வெளேர் தேங்காய்த் துருவல் பல் செட்டுடன், விகாரமாக இளித்துக்கொண்டு..... பேய்.

சாதாரணமாக அவ்வளவு எளிதில் பயப்படாத மீனாவின் முகம் முழுவதும் மரண ரேகை. இருவரும் கைகளைப்பிடித்துக்கொண்டு அந்தப்புகையை வெறித்தபடி நின்றனர். உள்ளே இருந்து வரப்போகும் உருவத்திற்கு மனதில் தோன்றிய கற்பனையில் உருவம் கொடுத்தபடி.

“நீ சத்தத்தைக் கேட்டாயா...?”

“அய்யோ...அது வேற...”

“ஆமாம்.... ஒரு வேளை சுனாமி, கினாமி அல்லது நிலநடுக்கம் இப்படி ஏதாவது இருக்குமோ.... வீடே இடிந்து போயிருக்கிறது....”

இருவரும் வாசலுக்கு ஓடினர்...

“மாமீ...கீதா மாமீ... வீட்டிலே நில

நடுக்கம் போல் ஏதாவது தெரிஞ்சுதா...?”

“இல்லையே....”

“சார், மிஸ்டர் ராம், உங்க வீட்டில்...?”

“நோ சார்... ஏதுமில்லையே... எதுக்காக இப்போது இந்தக்கேள்வி....”

“வீட்டில் ஒரு சத்தம் கேட்டது. பார்த்தால் ஹாலில் தரையில் பெரிய வெடிப்பு... அதன் வழியாகப் புகை வருகிறது....”

விரிந்த கண்களோடு , கையிலிருந்ததைப் போட்டது போட்டபடி, அனைவரும் மீனா வீட்டிற்குள் ஓடினர்.

“எங்கே சார்...இங்கேயா...காணுமே.....”

“இதோ...பாருங்க.... ”

அதற்குள் புகை வருவது நின்றிருந்தது. ஆனால் தரையில் வெடிப்பு மிகத்துல்லியமாகத்தெரிந்தது. காணொளியில் நடு நிசிப்பேய் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது... “முதலில் இந்தச் சனியனை நிறுத்து.....” பயத்தில் ஏற்பட்ட திடீர் துணிச்சலில் மீனாவைக் கொஞ்சம் அதட்டியே பேசினான். பயத்தில் ஏற்பட்ட பயத்தில், மீனாவும் பதில் பேசாமல் அவசரமாக ரிமோட்டை எடுத்து நிறுத்தினாள்.

அனைவரும் வெகு நிசப்தமாக ,

வெளிறிய முகத்தோடு அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டு நின்றனர்.

“மாமி.... சத்தம் கேட்டுதா...?”

“ஆமாம்... நான் கேட்கவில்லை...

இவர் கேட்டார்...”

ஒரே நிமிடத்தில் அங்கே சீனிவாசன் ஹீரோ ஆக்கப்பட்டான்...

முழுவதும் இரண்டு முறை.... மீண்டும் சிலமுறை.... பின் மேலும் பலமுறை கேட்கப்பட்டு, அவர்கள் மனதில் தோன்றிய உணர்வுக்கு வார்த்தை வடிவம்

கொடுக்கப்பட்டது. “இங்கே பாபா தான் தோன்றி இருக்கனும்.... நீங்க பாபா டிவோடீஸ் தானே.....” அனிச்சையாக அனைவரும் தப் தப் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.

“இல்லை சீனிவாசன்... எனக்கென்னவோ இது நல்லதாக இருக்கும் என்று படவில்லை....”

“புரியவில்லை...” “ஏதோ டார்க் ஸ்பிரிட் என்றே

தோன்றுகிறது. பாபாவாக இருந்தால் படத்தில் விபூதி கொட்டி இருக்கும் அல்லது சுவற்றில் நான் இருக்கிறேன் போன்ற

வார்த்தைகள் முளைத்திருக்கும். அவர் வீட்டை உடைத்ததாக எப்போதும்

கேள்விப்பட்டதில்லை. டு யூ

ஆல் அக்ரீ...?”

“ஆமாம், மாமா, நீங் சொல்வது ரொம்ப சரி... நானும் பாபா சத்சரிதம் படித்திருக்கிறேன்....பாபா ஆக்கிக் கொடுப்பார்...அழித்துப் பார்க்கமாட்டார்...”

”அப்படிப் பார்த்தால், இது செய்வினையாக கூட

இருக்கலாம்....” “இருக்கும்.... நான் கேள்விப்பட்டிருக்கேன்.... வீடு கட்டப்பட்ட இடம் ஒரு காலத்தில் சுடுகாடா இருந்தது என்றால் ... ஆவியாகக் கூட இருக்கலாம்....”

அங்கே அதன் பின் பேச்சு சென்ற திசை... அனைவருக்கும் பாபா கதையைவிட ஆவி கதை மிகவும் பிடித்துப்போய் விட்டதைக் காட்டியது.

“ஒரு கணபதி ஹோமம் செய்யனும்...” “முதலில் ஒரு மாந்த்ரீகனை அழைத்து பேய் ஓட்டனும்...”

“மீனா மாமி... எங்களுக்குத்தெரிந்த ஒருவர் இருக்கிறார். செய்வினை எடுப்பதில் எக்ஸ்பர்ட்... நாளை அழைத்துக்கொண்டு வருகிறேன்... முதலில் அசோஸியேஷன் மீட்டிங் போடுவோம். இப்போ இங்கே வந்த ஆவி, நம் வீட்டுக்கு வர வாய்ப்புள்ளதே.... முதலில் அங்கே சென்று பார்ப்போம்....”  ஒரே நிமிடத்தில் அந்த இடம் காலி ஆனது, மீனா, சீனிவாசன் மற்றும் அது........ (இன்னும் இருந்தால்) மட்டுமே.... இருவருக்கும் உடல் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை விட்டு விலகி படுக்கை அறைக்குள் சென்று அழுத்தமாகக் கதவை மூடிக்கொண்டார்கள்... என்னவோ பேய் கதவைத்தட்டி மே ஐ கம் இன் என்று சொல்லிவிட்டு வரும் நம்பிக்கையில்.

“இந்த இடம் சுடுகாடு இல்லை. கறும்புத்தோட்டம் தான் இருந்தது. நான் வீடு புக் பண்ணுவதற்கு முன் அதை எல்லாம் பார்த்துவிட்டு தான் வாங்கினேன்... அப்பா நிறைய இதைப்பற்றிச் சொல்லி

இருக்கிறார்...” “உங்க அப்பாக்கு தான் எல்லாம் தெரியுமே.. போறும் ,மூக்கை நுழைத்து நுழைத்து எல்லா வேலையையும் கெடுக்கத்தெரியும்”

“மீனு... அது எதுக்கு இப்ப... எவ்வளவு சீரியஸா ஒரு ப்ராப்ளம் நம் முன்னே இருக்கு... அதைப்பற்றிப் பேசு...” “அப்ப.... இது செய்வினையாக இருக்குமோ...?”

ஆபீசில் அவ்வப்போது சண்டை போடும் வேணு , பஸ்ஸில் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்ததை கேட்டபோது பெரியதாக கத்தித்தீர்த்த கண்டக்டர், சென்ற மாதம் வேலைச் சுத்தம் காரணமாக வேலையை விட்டு நீக்கிய முனியம்மாள், தீபாவளி பக்ஷிஸ் கொடுக்காமல் ஏமாற்றிய வாட்ச்மேன்,.... இப்படியாக அல்ப காரணங்களுக்காக எதிரிகள் ஆன அனைவரும் அங்கே அலசப்பட்டார்கள். இதில் யாராக இருக்கும், இந்த ஏவல் வேலையைச்செய்தது? தூங்குவதற்கு பயந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இன்னும் பயம் அதிகமாக.... ஒரு வழியாக இரவு சென்றது.

“யம்மா.... இனி வூட்டு வேலைக்கு நா வர்ல... வேற ஆள் பார்த்துக்க....” வேறு வழியின்றி, வீட்டை மெதுவாகப் பெருக்கி துடைத்த போது அந்த வெடிப்பு தனியாகத்தெரிய, சலங் என்ற சத்தத்தோடு ஒரு மணிக்கொத்து அதன் பக்கத்திலிருந்து கிடைத்தது... “இந்த மணி கொத்து இங்கே எப்படி வந்தது? பக்கத்தில் இருக்கும் கீ ஹோல்டரில் இருந்த சாவிக்கொத்தில் இருந்தது.... இது இங்கே... எப்படி...?” “அட.... நேற்று சத்தம் கேட்டது சொன்னேன் இல்ல.... அந்த இம்பாக்ட்டில் தெரித்து விழுந்திருக்கும்... எடுத்து மாட்டு... நான் கேசவன் நாயரைப்பார்த்து இது பற்றி பேசிவிட்டு வருகிறேன்.”

இதற்குள் மெதுவாக அங்கே கூட்டம் சேரத் தொடங்கி இருந்தது.... “யெஸ்.... ஹாரிபிள்... வந்து பார்த்தேன் வீடு முழுவதும் புகை...... சீக்கிரமா ஏதாவது செய்யவேண்டும்....”

”வாஸ்து ப்ராப்ளமாக இருக்குமோ...?”

“எனக்கென்னவோ இது ஏதோ

காட்டேறி வேலை போலதான்

தோன்றுகிறது...”

மானாவாரியாக

பேச்சுக்கள் அங்கே பேசப்பட்டபோது...

“நான்ஸென்ஸ்.... இது சாமியுமில்லை...பூதமுமில்லை.... வெறும் பிஸிக்ஸ்...”

நிதானமாக தன் வாக்கிங் ஸ்டிக்கில் சாய்ந்தபடி நின்றிருந்த மேஜர் ராகவன் வார்த்தைகளை உதிர்த்தார். “கம் அகெய்ன் மேஜர்....” இண்டோ பாக் சண்டையில் ஒரு காலில் குண்டுபட்டு, எடுக்கப்பட்ட இடம் சீழ் பிடித்து, ஒரு காலை இழந்து பின் கட்டைக்காலுடன் டொக் டொக் என்று சத்தம்போட்டு ஒரு வித அசெளகர்யமான சாய்வுடன் நடந்து முன் வந்த மேஜர் சிரித்தபடி அங்கே லேசாகப் பேச்சில் மிதந்தபடி இருந்த அந்த ஆவிக்கு ஒரு முற்றுப்புள்ளி

வைத்தார்.

“பாய்ஸ்... இதன் பெயர் தெர்மல் எக்ஸ்பான்ஷன். வீட்டின் கட்டுமானத்திற்கு உபயோகப்படும் பொருள்கள் யாவும் சூடு அதிகமாகும் போது விரிவடைவதும், குளிரில் சுருங்குவதும் இயற்கை. செங்கல், சிமெண்ட்,இரும்புக்கம்பிகள் என அனைத்தும். இந்தக்காரணத்தினால், கட்டிடங்களில் வெடிப்பு ஏற்படுவது சகஜம். இந்த பாதிப்பு, உள் சுவர்களிலும், இடைநிலை மாடியின் மேல் அல்லது தரை தளங்களில் பார்க்கமுடியாது. ஆனால், இயற்கையின் பாதிப்பு நேரடியாக உணரப்படும் கீழ் தளம் அல்லது மொட்டை மாடிகளில் இந்த வெடிப்பு மிக சகஜம்.

இந்த வீடு முதல் தளம். கீழே ஓபன் கார் பார்க். ஆக, இந்த வீட்டின் கீழ் தளத்தில் , வீட்டின் வலுவிற்காக நிறைய இரும்பு தண்டுகள் வைக்கப்பட்டு இருக்கும். பதினைந்து வருடத்தில் அவை சுருங்கி பின் விரிவடைந்து, பின் சுருங்கி... அவைகளும் என்னைப்போல் வலுவிழந்து , இன்று வெடித்திருக்கின்றன.... இவ்வாறான வெடிப்புக்கள் நீளவாட்டில் குறுக்குவாட்டை விட ஐம்பது சதவிகிதம் அதிகமாக இருக்கும். என் கால்களில் ஏற்பட்டதைப் போலவே... இதன் பாதிப்பு சிமென்ட் புகை, அவ்வளவே....” சிறிது பெரியதாக அங்கே நிசப்தம் வந்தடைந்தது. பின் சிரிப்புடன் அனைவரும் கலைந்து சென்றனர்.

வெகு சுதந்திரமாக வீட்டினுள் நுழைந்த சீனிவாசனும் மீனுவும்...அந்த வெடிப்பைப் பார்த்தபடி சற்றே நகர்ந்து அமர்ந்தனர். காரணம் ஏதுமில்லாமல், அந்த இடத்தில் அன்று விழுந்துக் கிடந்த மணிக்கொத்து.... இன்று மறுபடியும் கீ ஹோல்டரில் மாட்டப்பட்டு, காற்று ஏதுமில்லாத அந்த ஹாலில் லேசாக அசைந்து, பின் மறுபடியும் சிணுங்கி நின்றது.

தொகுப்பு : லதா ரகுநாதன்

Related Stories: