கணவன், மனைவியை தாக்கியவர் கைது

அரியலூர்,நவ,21: அரியலூர் மாவட்டம் கீழவரப்பன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுபிக்கியநாதன் என்பவரின் மனைவி கலைச்செல்வி(33). இவர் மெயின் ரோடு பகுதி வழியாக நடந்து செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் சேகர் (47) அவரை வழிமறித்து எதற்காக எனது இடத்தில் குப்பை கொட்டினாய் எனக்கேட்டு தகாத வார்த்தையில் திட்டி கலைச்செல்வியை கன்னத்தில் அடித்துள்ளார். இதனை கேட்க வந்த கலைச்செல்வியின் கணவர் சுபிக்கியநாதனையும் தாக்கியுள்ளார். இது குறித்து கலைச்செல்வி தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதனையடுத்து தூத்தூர் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி தொழிலாளியை தாக்கியவர் கைது: அரியலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (40). இவர் ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் கவுஞ்சிநாதன் (26). விவசாயி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பழனிச்சாமியை அங்கு வந்த கவுஞ்சிநாதன் தகாத வார்த்தைகளினால் திட்டி உள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவுஞ்சிநாதன் அங்கிருந்த உருட்டு கட்டையால் பழனிசாமியையும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த ஆட்டையும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தலையில் காயமடைந்த பழனிசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட கவுஞ்சிநாதன், பழனிசாமியின் வீட்டிற்கு சென்று பழனிசாமியின் மனைவி மற்றும் தாயாரை தகாத வார்த்தையில் திட்டி அவரது தாய் அலமேலு (70) என்பவரையும் தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அலமேலுவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் தூத்தூர் போலீசார் கவுஞ்சிநாதனை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பைக் மோதி தொழிலாளி பலி: ஜெயங்கொண்டம் அருகே பைக் மோதியதில் தொழிலாளி பலியானார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கருப்பையன்(45). இவர் நேற்று காலை வீட்டிற்கு மீன் வாங்குவதற்காக தனது மொபட்டில் பாப்பாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லித்தோப்பு பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது பின்னால் வந்த பைக் மோதியது. இதில் கருப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மணல் கடத்திய வாலிபர் கைது: அரியலூர் மாவட்டம். தூத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார்  அழகிய மணவாளன் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோவை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து மினி ஆட்டோவில் மணல் கடத்தி வந்தது  சின்னபட்டக்காடு கிராமத்தை சேர்ந்த தங்கப்பிரகாசம் என்பவரின் மகன் மணிகண்டன்(23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார்  மணிகண்டனை கைது செய்து மினி ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்றவர் கைது: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கடைவீதி பகுதியில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த வீரகனூர் பகுதியை சேர்ந்த சாதிக்பாட்ஷா (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து சாதிக்பாட்ஷாவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: