என் குடும்பம்... என் தோழிகள்...

நன்றி குங்குமம் தோழி

மனம் திறக்கிறார் சின்னத்திரை புகழ் ஆல்யா மானசா

மூன்று மாதமாக ஒளிபரப்பாகி டாப் 5 ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் இனியா, மக்கள் மனதினை வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் தொடரின் நாயகி ஆல்யா மானசா. துறுதுறுப்பான பேச்சில் அனைத்து இல்லத்தரசிகளின் மனதினை கவர்ந்துள்ள ஆல்யா தன் குடும்பம் மற்றும் தோழிகள் குறித்து மனம் திறக்கிறார். ‘‘எனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் கிடையாது. ஒரு வகுப்பில் படிக்கும் போது இரண்டு பேர் இருப்பாங்க. அடுத்த வருஷம் வேற வகுப்பிற்கு மாறியதும் வேற இரண்டு ஃபிரண்ட்ஸ் வருவாங்க. அதனாலேயே எனக்கு நண்பர்கள் வட்டம் மிகவும் குறைவு. மேலும் கல்லூரியில் படிக்கும் போது இரண்டாம் ஆண்டில் இருந்தே மாடலிங், சினிமான்னு வந்துட்டேன்.

அதுவும் தோழிகளை பெரிய அளவில் மெயின்டெயின் செய்ய முடியாததற்கு. நான் சின்னத்திரையில் பிரபலமான பிறகு ஒரு சிலர் என்னை அடையாளம் கண்டு போன் செய்து பேசுவாங்க. அந்த நட்பும் செல்போனில் ஹை... பை சொல்வதோடு சரி. பள்ளி, கல்லூரி மற்றும் திருமணமான பிறகும் ஃபிரண்ட்ஸ் கூட வெளியே போனதில்லை. காரணம், என் மாமியார் வீட்டில் எல்லாருமே ஃபிரண்ட்ஸ் போல தான் பழகுவாங்க. அதுவும் என் மாமியார் ரொம்பவே ஸ்வீட். எப்போதுமே யூத்தா இருப்பாங்க. நான் ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போகவே இரவு 11 மணியாயிடும். அவங்க அந்த சமயத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட போலாம்ன்னு கூட்டிக்கிட்டு போயிடுவாங்க. ஒரு மணிக்கெல்லாம் நாங்க ஐஸ்கிரீம் சாப்பிட போயிருக்கோம்.

எங்களுடையது பத்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பம். என் கணவர் சஞ்சீவ் அவரின் அண்ணா, அண்ணி, பசங்க அப்புறம் என் மாமியார் அவர்களின் தங்கச்சின்னு எல்லாரும் ஒன்னாதான் இருக்கோம். வீட்டுக்குள்ள யாருமே தனியா இருக்க மாட்டோம். அப்படியே ஒருத்தர் தனியா ரூமில் இருந்தா, எல்லாரும் அங்க வந்திடுவாங்க. அதனால் நான் வீட்டில் இருக்கும் போது கூட நண்பர்களுடன் இருப்பது போல் தான் ஃபீல் செய்றேன். அதனாலயோ என்னவோ எனக்கு தனிப்பட்ட ஃபிரண்ட்ஸ் அமைச்சுக்கணும்னு தோணல.

ஆனால் முதல் முறையா இனியா சீரியல் ஆர்டிஸ்ட் அவர்களோடு சேர்ந்து வெளியே போனேன். இப்ப என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்ன்னு சொல்லணும்ன்னா இவங்க இரண்டு பேரை சொல்லலாம். இனியா தொடரில் எனக்கு அக்காவா நடிக்கும் மான்சி (யாழினி) அப்பறம் என் தோழியாக நடிக்கும் லைலா (சோனாலி). இவங்களோட முதல் முறையா என் குடும்பம் இல்லாமல் சினிமாவிற்கு போனேன். இவங்களுடன் இருக்கும் போது அவ்வளவு சந்தோஷமா உணர்கிறேன்.

நாங்க சந்திச்சு ஒரு மூணு மாசம் தான் இருக்கும். இந்த மூணு மாசத்தில் எனக்கு ரொம்பவே க்ளோசாயிட்டாங்க. சொல்லப்போனால் ஷூட்டிங் இல்லாத நாட்கள் நான் இவங்கள ரொம்பவே மிஸ் செய்றேன். மாசம் 25 நாட்கள் ஷூட்டிங் இருக்கும். அந்த நாட்கள் இவங்களோட தான் நான் இருப்பேன். அந்த உணர்வு எனக்கு மட்டுமில்லை இவங்களுக்கும் இருந்ததால தான் நாங்க வெளிய போக முடிவு செய்தோம். திடீரென்று டிக்கெட் புக் செய்து கிளம்பினோம். எங்க வீட்டிலேயே ரொம்ப ஆச்சரியப்பட்டாங்க. யார் கூடேயும் போகாத நான் எப்படி போனேன்னு. இனி மாசம் ஒரு நாள் நாங்க மூணு பேரும் எங்கயாவது வெளியே போகலாம்னு முடிவு செய்திருக்கோம்.

இவங்க இரண்டு பேருமே ரொம்ப ஸ்வீட், லைலாவிற்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. ஆனால் எனக்கும் மானசிக்கும் அவ ஒருத்தி தான் ஃபிரண்ட். சில சமயம் லைலாவிற்கு காலை பத்து மணிக்கெல்லாம் ஷூட்டிங் முடிஞ்சிடும். நாங்க அவள, ‘போகாத இரு’ன்னு சொல்வோம். நாங்க சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக ஷூட் இல்லைன்னாலும், எங்க ஷாட் முடியும் வரை இருப்பா. அவளுக்கு ஃபிரண்ட்ஸ் கூட இருக்க அவ்வளவு பிடிக்கும். மான்சி சொந்த ஊர் குஜராத். கொச்சியில் செட்டிலாயிட்டாங்க. தமிழ் தெரியாது. இப்பதான் ஒன்று இரண்டு வார்த்தை பேச கத்துக்கிறாங்க. இங்க அவங்க தனியா இருப்பதால், லோன்லியா ஃபீல் செய்வாங்க. அப்ப நானும் லைலாவும் தான்  நாங்க இருக்கோம்ன்னு சொல்லி சமாதானம் படுத்துவோம்’’ என்றவர் தன் குடும்பம் பற்றி பேசத் துவங்கினார்.

‘‘நான் சென்னை பொண்ணு. சவுகார்பேட்டையில் தான் வசித்து வந்தேன். திரிஷாவோட தீவிர ஃபேன். அதனாலேயே அவங்க படிச்ச எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். முதல் ஒரு வருஷம் தான் முழுசா கல்லூரிக்கு சென்றேன். அதன் பிறகு மாடலிங், டான்ஸ், சினிமான்னு வந்துட்டேன். சினிமா சார்ந்து நடக்கும் நிறைய கலை நிகழ்ச்சியில் டான்சரா இருந்திருக்கேன். அதைத் தொடர்ந்து ‘மானாட மயிலாட’ நடன போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கு தான் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். குறிப்பா எந்த ஒரு வேலையாக இருந்தாலும் எப்படி ஹார்ட்வர்க் செய்யணும்னு தெரிந்து கொண்டேன். நடன போட்டிக்கு பிறகு என்ன செய்ய போறோன்னு எனக்கு தெரியல. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன்.

கிட்டதட்ட 200 ஆடிஷனுக்கு மேல போயிடுவேன், தேர்வாவேன். ஆனால் எனக்கான கதாபாத்திரம் இல்லைன்னு தோணும், நோன்னு சொல்லி வந்திடுவேன். இதற்கிடையில் ஜும்பா பயிற்சியாளராக வேலை பார்த்தேன். தினமும் குறைந்தபட்சம் நன்கு பயிற்சி வகுப்பு எடுப்பேன். அந்த நேரத்தில் தான் ‘ஜுலியும் நான்கு பேரும்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும், என்னுடைய கெரியரில் முக்கியமானது. அதன் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் படம் செய்தேன். ஆனால் அந்த படங்கள் இரண்டுமே டிராப்பாயிடுச்சு’’ என்றவர் சின்னத்திரையில் அறிமுகமானது பற்றி விவரித்தார்.

‘‘சினிமாவும் பெரிய அளவில் கைகொடுக்கல. என்ன செய்யலாம்னு யோசிக்கும் போதுதான், என் அப்பாவிற்கு கேன்சர்னு தெரியவந்தது. எங்க எல்லாருக்குமே என்ன செய்றதுன்னு தெரியல. அவருடைய சிகிச்சைக்கு பணம் தேவை. நான் ரொம்பவே பயந்து இருந்தேன். காரணம், வீட்டில் நான் மூத்த பிள்ளை என்றாலும் செல்லப் பெண். என்னை அம்மா வீட்டு வேலை செய்ய விடமாட்டாங்க. அவங்க டெய்லரிங் செய்வாங்க. எனக்கு கத்துக் கொடுக்க சொல்வேன். நீ இதெல்லாம் செய்ய வேண்டாம். நீ பாசாயிடு, இந்த வேலை செய்ய ஆட்களை வச்சுக்கன்னு சொல்வாங்க. அம்மாவிற்கு, நானும், என் தங்கையும் நல்ல நிலையில் இருக்கணும்ன்னு விருப்பம்.

எங்களுடையது சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்தான். அதனால நாங்க ஒரு படி மேலே இருக்கணும்ன்னு விரும்பினாங்க. சைக்கிளிங் மற்றும் செஸ் போட்டியில் தேசிய அளவில் விளையாடி இருக்கேன். ஜப்பான் மற்றும் பிரெஞ்ச் மொழியும் கத்துக்கிட்டேன். அந்த சமயத்தில் தான் அப்பாவிற்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு குடும்பத்தை எப்படி நடத்தணும்னு அப்பா சொல்லி தெரிந்து கொண்டேன்.

அவரின் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்ட போது தான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதால், சின்னத்திரையில் நான் கவனம் செலுத்தாம இருந்தேன். இப்ப எனக்கு பணத்தேவை இருந்ததால் சீரியலில் நடிக்க முடிவு செய்தேன். அப்பாவையும் குணமாக்கினேன். அதே சமயம் சீரியல் எனக்கான ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது’’ என்றவர் தன் கணவர் சஞ்சீவ் மற்றும் அவரின் குடும்பத்தினர் பற்றி பேசினார்.

‘‘பிரபல தொலைக்காட்சியில் முதல் முறையாக நான் நடிக்க இருப்பதால், அது குறித்து நிறைய விளம்பரங்கள் வெளியானது. அதைப் பார்த்து பலர் நான் பார்க்க பெண் போல இல்லை என்று சமூகவலைத்தளங்களில் கமென்ட் செய்திருந்தனர். அது என்னை ரொம்பவே பாதிச்சது. உடனே இயக்குனரிடம் நான் நடிக்கலன்னு சொல்லிட்டேன். அவர் என்ன பிரச்னை என்று கேட்ட போது விவரத்தை  சொன்னேன். உடனே அவர் இதுதான் பிரச்னையான்னு சொல்லிவிட்டு, அடுத்த எபிசோட் முதல் என்னை லட்டு போல் அழகாக காண்பித்தார். சீரியலும் ஹிட் எனக்கும் நிறைய ஃபேன்சும் கிடைச்சாங்க. இந்த சீரியலில் நானும் சஞ்சீவும் இணைந்து நடித்தோம்.

எங்க இருவருக்கும் காதல் மலர்ந்தது. அவர் முஸ்லிம், நான் ஹிந்து. எங்க வீட்டில் கடும் எதிர்ப்பு. எங்க வீட்டாரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டேன். எங்களின் திருமணம் பற்றி மீடியாவில் பலவிதமாக பேசப்பட்டது. அது என்னுடைய கெரியரிலும் ஒரு சின்ன சரிவைக் கொடுத்தது. எனக்கு அது ரொம்பவே கஷ்டமா இருந்தது. சின்ன வயசிலேயே கல்யாணம், குழந்தை என்பதால், என்னுடைய நடிப்பை தொடர முடியாதுன்னு கவலைப்பட்டேன். அப்ப என் மாமியார் தான் எனக்கு பக்கபலமா இருந்தாங்க.

அவங்க சொன்ன ஒரே வார்த்தை அவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன் என்பது தான். வீட்டில் பெரியவங்க இருக்கும் போது நம்முடைய குழந்தைகள் பற்றிய கவலை இருக்காது. வேலையில் முழு கவனம் செலுத்த முடியும். என் இரண்டு குழந்தைகளையும் அவங்க தான் வளர்க்கிறாங்க. என் மகன் பிறந்த போது அவனுக்கு உடல் ரீதியாக பிர்ச்னை இருந்தது. ஐ.சியுவில் வைத்திருந்தார்கள். ஒரு வாரம் நான் அங்கேயே தங்கியிருந்து அவனைப் பார்த்துக் கொண்டேன்.

குழந்தை பிறந்த சில நாட்களில் நான் மறுபடியும் ஷூட்டிங் வருவதாக சொல்லித்தான் வந்தேன். என் மகனின் உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கல. நான் சம்பாதிக்கிறதே இவங்களுக்காக தான். அப்படி இருக்கும் போது, அவன் உடல் நிலை முக்கியம் என்பதால், சீரியலில் இருந்து விலகிட்டேன். ஆறு மாசத்தில் அவன் உடல் நலமான பிறகு, இனியாவிற்கான அழைப்பு வந்தது. நல்ல கதை என்பதால் சரின்னு சொல்லிட்டேன், இப்ப என் மகன் பயங்கர சுட்டியா இருக்கான்’’ என்றவர் தன் மகன் ஐ.சியுவில் இருக்கும் போது பல குழந்தைகளுக்கு தன் தாய்ப்பாலினை தானமாக கொடுத்துள்ளார்.

‘‘பாப்பா ஐ.சியுவில் இருக்கும் போது, நான் தாய்ப்பாலை பம்ப் செய்து அவனுக்கு கொடுப்பேன். ஐ.சியுவில் இவனைப் போல நிறைய குழந்தைங்க இருப்பாங்க. அவங்கள பார்க்க யாரும் வரமாட்டாங்க. விசாரித்த போது, அங்கேயே தங்கி பார்த்துக் கொள்ள வசதி இருக்காது. மேலும் குழந்தையைவிட்டு விலகினால், தாய்ப் பால் சுரப்பதும் குறைஞ்சிடும்ன்னு சொன்னாங்க. அவ்வளவு பிஞ்சுக் குழந்தைகளைப் பார்க்கும் போது கஷ்டமா இருந்தது. அதனால் நான் என் பாப்பாவிற்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, மற்ற குழந்தைகளுக்கும் சேர்த்து பம்ப் செய்து கொடுப்பேன். அது எனக்குள் எதையோ சாதித்தது போன்ற உணர்வினை கொடுத்தது.

நான் இப்படி இருக்க காரணம் என் கணவர் சஞ்சீவ், அவர் இல்லைன்னா என் வாழ்க்கை இவ்வளவு அழகா மாறியிருக்குமான்னு தெரியாது. என் மேல உயிரா இருக்கார். என்னுடைய எல்லா விஷயத்திலும் உறுதுணையா இருக்கார். ஒரு அன்பான அழகான குடும்பம் கிடைக்க சஞ்சீவ் தான் காரணம். அவர் என்னை ‘பாப்பு’ன்னு தான் கூப்பிடுவார். என் பசங்களுக்கும் நான் பாப்பு தான். என் மாமியாரை தான் அம்மான்னு கூப்பிடுவாங்க. எங்க வீட்டின் ஆணி வேர் என் மாமியார் தான். அவங்க இல்லைன்னா நாங்க இல்லை.

என் பசங்களுக்கு எல்லாமே அவங்க தான். ஆனால் அவங்க அழகுக்கலை நிபுணரா இருந்தவங்க. என் மாமனார் ஏர் ஃபோர்சில் வேலை பார்த்து வந்தார். அப்ப தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி இருக்கும். என் மாமனார் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, புகைப்பட கலைஞரா மாறிட்டார். இப்ப அவர் இல்லை. என்னுடைய பெரிய இன்ஸ்பிரேஷன் என் மாமியார்தான்’’ என்கிறார் ஆல்யா.

தொகுப்பு : ப்ரியா

Related Stories: