தொழிலதிபர் வீட்டு பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர்,நவ.16: பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(58). தனியார் பஸ் போக்குவரத்து நடத்தி வரும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். இவரது மகன் ராம்குமார்(34). பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகே ராஜா நகரில் வசித்து வரும் இவர் டயர் ஏஜென்சி மற்றும் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் வெளிநாடு சென்ற நிலையில் இவரது மகள் கவுதமி திருச்சியிலுள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று உறவினர் வீட்டிலேயே தங்கி விட்டு நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். 2 நாள் ஆளில்லாமல் பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டின் பீரோவிலிருந்த 1.75 லட்சம் ரொக்கப்பணம், 35 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து கிடைத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வீட்டை சோதனையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். பெரம்பலூரில் அடுத்தடுத்து கடைகளில், வெளிநாடு சென்றவர்களின் வீடுகளில் கொள்ளை நடந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்: பெரம்பலூர் கல்யாண்நகரை சேர்ந்தவர்  ரெட்டிங்ராஜ்(60). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

இவர் தனது மனைவி எலிசா  என்பவருடன் அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில்  ரெட்டிங்ராஜ் செல்போனுக்கு அவரது ஏடிஎம் கார்டு மூலம் ரூ.20ஆயிரம் பணம்  எடுத்ததாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. வீட்டு பீரோவில் வைத்திருந்த  ஏடிஎம்கார்டில் எப்படி பணம்எடுத்திருக்க முடியும் என நினைத்து சந்தேகமடைந்த  ரெட்டிங்ராஜ், தனது வீட்டில் மற்றொரு பகுதியில் வாடகைக்கு  குடியிருந்தவரிடம் செல்போனில் தொடர்புகொண்டு நாங்கள் குடியிருக்கும் வீடு  திறந்திருக்கிறதா என்றுபார்த்து சொல்லுங்கள் எனக்கூறியுள்ளார். அப்போது  ரெட்டிங்ராஜ் வீட்டின் பூட்டுஉடைத்து திறக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோ  திறந்து கிடப்பதோடு, உள்ளிருந்த பொருட்கள் சிதறிக்கிடப்பதும்  ரெட்டிங்ராஜிக்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ரெட்டிங்ராஜ்  வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பீரோவிலிருந்த ஏ.டி. எம் கார்டையும்,  அதனோடிருந்த பாஸ்வேர்டு நெம்பர்எழுதிய சீட்டையும் எடுத்துச் சென்றுள்ளனர்.  அதனை எங்கிருந்தோ வங்கி ஒன்றின் ஏடிஎம்மையத்தில் பயன்படுத்தி  ரூ20ஆயிரத்தைத் திருடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: