செந்துறை அருகே பொதுத்தேர்வு மையத்தை மாற்றியதை கண்டித்து மாணவர்கள் வெளிநடப்பு

செந்துறை,நவ.16; செந்துறை அருகே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளியை மாற்றியமைத்ததை கண்டித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுடன் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் 279 மாணவர்களுடன் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வை அருகேயுள்ள குறிச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுதி வந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத தேர்வை மையத்தை ஆலத்தியூரில் உள்ள தனியார் பள்ளிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு போக்குவரத்து, தனியார் பள்ளியின் கட்டுபாடுகள் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. எனவே, பழையப்படி குறிச்சிக்குளம் அரசு பள்ளியிலேயே தேர்வு மையத்தை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் அல்லது முள்ளுக்குறிச்சி பள்ளியிலேயே பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த தளவாய் போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து வகுப்புக்கு சென்றனர்.

Related Stories: