கொடி கம்பம் மாயம்; தமுமுகவினர் மறியல்

வத்தலக்குண்டு, நவ. 16: கொடி கம்பத்தை கடத்தி சென்ற குற்றவாளிகளை கைது செய்ய கோரி வத்தலக்குண்டுவில் தமுமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோடு காவலர் குடியிருப்பு அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் கொடி கம்பம் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை இக்கம்பம் மாயமாகி இருந்தது. அதேபோல் புதுப்பட்டி ரோட்டியில் உள்ள சின்னபள்ளிவாசலில் பறந்து கொண்டிருந்த கொடியும் மாயமாகியிருந்தது. தகவலறிந்ததும் தமுமுகவினர், மனிதநேய மக்கள் கட்சியினர் பலர் பெரிய பள்ளிவாசல் அருகே திரண்டனர். தொடர்ந்து சாலையில் டூவீலர்களை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். கொடிக்கம்பத்தை கடத்தி சென்ற குள்ளவாளிகளை கைது செய்ய கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக, தமுமுக நகர செயலாளர் முகமதுரிஜால் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கடந்தாண்டு இந்த கொடி மரத்தை சாய்த்தார்கள். இந்தாண்டு கடத்தியே சென்று விட்டனர். 2 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் கட்சி மேலிடத்திடம் கலந்து அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்குவோம்’’ என்றார்.

Related Stories: