கொள்ளிடம் அருகே 4 ஆண்டுகளாக தூர்வாராத களத்துமேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு நீரின்றி பயிர் பாதிப்பு விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்ளிடம், நவ.15: கொள்ளிடம் அருகே 4 ஆண்டுகளாக பாசன வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணிரீன்றி பயிர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.        

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில் பிரதான தெற்குராஜன் வாய்க்காலிலிருந்து பாசன கிளை வாய்க்கால் பிரிந்து கொன்னக்காட்டுபடுகை, கன்னாங்குளம், சாமியம், மேலவல்லம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 1200 ஏக்கர் விளை நிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலகவும், வடிகால் வாய்க்காலகவும், இருந்து வருகிறது. இப்பகுதியின் விவசாயிகள் பெரும்பாலோனர் இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பியே பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் வெட்டப்படாமலும், தூர்வாரப்படாமலும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதால் வாய்க்கால் குறுகியும், புதர் மண்டியும் வாய்க்கால் முழுவதும் செடி கொடிகள், புதர்கள் மூடியுள்ளன. இதனால் பாசனத்திற்கு உரிய தண்ணீர் வயல்களுக்கு சென்று சேரவில்லை. போதிய தண்ணீர் சென்று சேராததால் சம்பா நெற்பயிர் கருகும் நிலையில் உள்ளது.

இது குறித்து மூமுக மாவட்ட செயலாளரும் முன்னோடி விவசாயியுமான முனிபாலன் கூறுகையில், சுமார் 1200 ஏக்கர் விளை நிலங்களுக்கு முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலகவும் இருந்து வரும் களத்துமேட்டு வாய்க்கால் கடந்த 4 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. வாய்க்கால் கரையை ஒட்டி வளர்ந்துள்ள முள்செடிகள் மற்றும் புதர்களால் வாய்க்கால் மூடியே கிடக்கிறது. தண்ணீர் சென்று சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் வாய்க்காலை தூர்வார தவறினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் புத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

Related Stories: