மழைக் காலத்தில் கொட்டுது பனி தொடர்ந்து ஏமாற்றி வரும் பருவமழை பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை

காரைக்குடி, நவ.15: பருவமழை காலத்திலும் போதிய அளவில் மழை இல்லாமல் கடும் பனிப்பொழிவும், வெயிலும் நீடிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 700 எக்ேடர் பரப்புக்கு மேல் விவசாயம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் மிகக் குறைவு. வருடாந்திர சராசரி மழையளவு 892 மி.மீ. இதில் 60 சதவீதம் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையை நம்பியே உள்ளது. இம்மாவட்டத்தில் கண்மாய்களே முக்கியமாக பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்மாய்கள் மழைக்காலங்களில் நிரம்பும். 571க்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளும் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளன. நெல், நிலக்கடலை, எள், சிறுதானிய பயிர்கள், பயறுவகைகள், பருத்தி, மிளகாய் மற்றும் கரும்பு ஆகியவை முக்கியமாகப் பயிரிடப்படுகின்றன.

பருவமழை தொடர்ந்து கைவிட்டதால் பல விவசாயிகள் விளை நிலங்களை தரிசாக விட்டுவிட்டனர். மேலும் சிலர் விளைநிலங்களை, விலை நிலங்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பினர். ஆனால் அக்டோபர் கடந்து நவம்பர் ஆன பின்னரும் பருவமழை சீராக பெய்யவில்லை. கடந்த சில வாரங்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. இதுவும் கைகொடுக்கவில்லை. கடந்த சில தினங்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மேலும் காலை, இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதே நிலை நீடித்தால் பருவ நெல் சாகுபடியை முழு வீச்சில் துவங்க முடியுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பருவ மழை ஏமாற்றி வருவதால் இதுவரை விவசாய பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது. கிணற்றுப் பாசனத்தை நம்பி ஒரு சில இடங்களில் பயிர் செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கு தேவையான தண்ணீர் நிலத்தில் இல்லாத நிலையில் பனிபொழிவு உள்ளதால் பயிர்கள் பழுப்பு நிறங்களுக்கு மாறி கருகிவிடும். மழை இல்லாததால் விதைத்ததாவது பிழைக்குமா என்ற அச்சம் உள்ளது’’ என்றனர்.

Related Stories: