தயார் நிலையில் மீட்பு குழு

மரக்காணம், நவ. 15: தற்போது உருவாகி உள்ள கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என மாவட்ட பேரிடர் கால சிறப்பு அதிகாரி பழனிசாமி தெரிவித்தார். வங்க கடலில் தற்போது கஜா புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் இன்று மாலையில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதியில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இந்த புயலின் தாக்கம் விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியிலும் இருக்கும் என்று கூறுகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் கடந்த மூன்று நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். இந்த புயலின் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் இப்பகுதியில் உள்ள அனைத்து மீனவர் கிராமங்களிலும் மீட்பு குழுவினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இது போல் புயலின் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு இடங்களில் ஜெனரேட்டர்கள், பொக்வலன் இயந்திரங்கள் போன்றவைகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கிராமங்களில் இருக்கும் அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் தற்போது குடிநீர் நிரப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பனிச்சமேடு மீனவர் கிராமத்தில் இருக்கும் புயல் பாதுகாப்பு மையத்தில் தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்பு குழுவினரை மாவட்ட பேரிடர் கால சிறப்பு அதிகாரி பழனிசாமி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதனை தொடர்ந்து மீனவர் பொதுமக்களை சந்தித்து புயல் நேரத்தில் மேடான பகுதிக்கு வந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ள பைபர் படகு மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி சாதனங்கள், சீற்றத்துடன் காணப்படும் கடலையும் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் பழனிசாமி கூறுகையில், தற்போது உருவாகி உள்ள கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. இது போல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தலைமை இடத்தில் அடிக்கடி தொடர்புகொண்டு அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது, என்றார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ஏழுமலை, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜீ, வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடன இருந்தனர்.

Related Stories: