உறவினர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்னைக்கு வந்தபோது சோகம் தாறுமாறாக வந்த கார் மோதி திண்டுக்கல் வியாபாரி சாவு

சென்னை, நவ. 15: மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த திண்டுக்கல் வியாபாரி மீது தாறுமாறாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, போதையில் காரை ஓட்டிய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் (30). இவரது மனைவி பாத்திமா (28). இவர்களது மகள் யாசின் (7). 3ம் வகுப்பு மாணவி. பாத்திமாவின் அண்ணன் மீரான் மொய்தீன் (50). இவர்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர். நேற்று முன் தினம் மாலை மீரான் மொய்தீன் தனது தங்கை மகளான யாசின் மற்றும் உறவினர்களான ஜமால் மொய்தீன் (50), ஷகீனா (40), முகமது (45), காஜா (40), மரியம் (35) மற்றும் முகமது அபி (4) ஆகிய 7 பேருடன் சென்னையில் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு, காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து செண்டர்மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சிறுமி யாசின் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். மீதி 7 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீரான் மொய்தீன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மீரான்மொய்தீன் உறவினரான திண்டுக்கல்லை சேர்ந்த மளிகை கடைக்காரர் உபயதுல்லா தனது குடும்பத்துடன் இறுதி சடங்கிற்கு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். பிறகு மீரான்மொய்தீன் வீட்டிற்கு செல்ல திருமங்கலம் எஸ்டேட் சாலை அருகே வந்தார். நள்ளிரவு என்பதால் பிளாட்பாரத்திலேயே இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, எஸ்டேட் சாலை சந்திப்பில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் விபத்தை தவிர்க்க எதிர் திசையில் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த உபயதுல்லா மீது ஏறி இறங்கிறது. இதில் உபயதுல்லா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். உறவினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உபயதுல்லா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த சதீஷ்குமார் (40) என்றும், இவர் குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து  பிளாட்பாரத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த உபயதுல்லா மீது மோதியதும் தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சதீஷ்குமார் மீது அதிவேமாக வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் இயக்கியது உட்பட 5க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த காரையும்  பறிமுதல் செய்தனர்.

Related Stories: