செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் பழுது வாகனம் மோதி வாலிபர் பலி

செங்கல்பட்டு, நவ.15: செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த வழியாக சென்றுவருகின்றனர். செங்கல்பட்டு பழையபேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து மறைமலைநகர் நோக்கி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதேவழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

தகவல் அறிந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் வந்து சடலத்தை மீட்டு செங்லபட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் இருந்த மின்விளக்குகள் பழுதாகி பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேம்பாலத்தில் ஒரு தனியார் நிறுவன பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிகொண்டதில் 29 பேர் காயம் அடைந்தனர். அதேபோன்று கடந்த மாதம் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். இதனால், இந்த வழியாக செல்லவே வாகனஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் பழுதான மின்விளக்குகளை புதுப்பிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: