திருத்தணியில் திருக்கல்யாணம் கோலாகலம்

திருத்தணி, நவ. 15: திருத்தணி முருகனுக்கு நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதையடுத்து சுமங்கலி பெண்களுக்கு பூ, பழம், மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. காவடி மண்டபத்தில் உள்ள ஆறுமுகசாமி சமேத வள்ளி, தெய்வானை உற்சவ சிலைகளுக்கு காலை, மாலை வேளைகளில் நறுமண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து வழிபட்டனர். கடந்த 9ம் தேதி தங்க கவசம், 10ம் தேதி திருவாபரணம், 11ம் தேதி வெள்ளி கவசம், 12ம் தேதி சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை லட்சார்ச்சனையும் மாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் பல்லக்கில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில்,நேற்று காலை 10 மணியளவில் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் துவங்கின.

 முன்னதாக, திருத்தணி முருகன் கோயிலில் பிரசாத கடை நடத்திவரும் திருச்செந்தூர் அரிகரமுத்து குடும்பத்தினரின் உபயத்தில் பழம், திருமண உடைகள் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் மேளவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் தெய்வானை கழுத்தில் முருகப்பெருமான் சார்பில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் முருகனின் திருக்கல்யாணத்தை தரிசித்து, மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த சுமங்கலி பெண்களுக்கு பூ, பழம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, பேஷ்கார் அன்பழகன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து கோயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: