கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை

திருவள்ளூர், நவ. 15: அரசு பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தரக்கோரி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் பெரியகுப்பம் நரிக்குறவர்கள் சார்பில், விஜயன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கொடுத்த மனுவின் விவரம்: திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூடாரம் அமைத்து வசித்து வருகிறோம். எங்களுக்கு அதிகத்தூர், புன்னப்பாக்கம் ஆகிய கிராமங்களில் அரசு இடம் ஒதுக்கி பட்டா வழங்கியுள்ளது.   ஆனால், இதுவரை வீடுகளை கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நாங்கள் வசிக்கும் பெரியகுப்பம் பகுதிக்கு கடந்த 8ம் தேதி வருவாய்த்துறை மற்றும் போலீசார் வந்து, உடனடியாக கூடாரங்களை காலி செய்யுமாறு மிரட்டிச் சென்றனர். எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், அரசு ஒதுக்கிய இடத்தை சுத்தம் செய்து, அங்கு குடிசைகளை கட்ட இயலவில்லை. எனவே, அரசு கூறியபடி, எங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் உடனடியாக வீடுகளை கட்டித்தர  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இ உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதையடுத்து நரிக்குறவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: