கஜா புயல் எதிரொலி எண்ணூரில் கடல் அரிப்பு : பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

திருவொற்றியூர், நவ. 15: எண்ணூரில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் இன்று கஜா புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எண்ணூர் கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகளவில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, சின்னக்குப்பம் மற்றும் பெரியகுப்பம் கடற்கரை பகுதிகளில் ஆர்ப்பரித்து வந்த அலைகளால் கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டிருந்த பாறாங்கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

மேலும், பெரியகுப்பம் அருகில் கட்டுமரம் மற்றும் பைபர் படகுகள் செல்வதற்கு பாறாங்கற்கள் போடாமல் விடப்பட்டு இருந்த கரை பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மணல் அரிப்பு ஏற்பட்டு, அவ்வழியாக ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்து நேற்று காலை, பெரியக்குப்பம் கடல் பகுதிக்கு சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ குப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.

‘விரைவில் தூண்டில் வளைவு’

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: எர்ணாவூர் குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய பகுதிகளில் கடல் அரிப்பை நிரந்தரமாக தடுத்திடும் விதமாக ₹35 கோடி மதிப்பீட்டில், 9 தூண்டில் வளைவுகளை அமைத்திட டெண்டர் விடப்பட்டு உள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கும். அதன்பிறகு இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்படாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: