கந்தசஷ்டி விழா நிறைவு குமரி முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகர்கோவில், நவ.15 : குமரி மாவட்ட முருகன் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, வேளிமலை குமாரகோயில், வெள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், தோவாளை முருகன் கோயில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கன்னியாகுமரி முருகன் குன்றம், பெருவிளை தெய்வி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நடைபெற்று வந்தது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்றுமுன் தினம் மாலை நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று (14ம்தேதி) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில், காலை 10 மணிக்கு திருக்கல்யாண நிகழ்வு தொடங்கியது. பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் பெருவிளை தெய்வி முருகன் கோயிலில் நேற்று பகல் 12 மணிக்கு திருக்கல்யாணநிகழ்ச்சி நடந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்ததும், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.  பகல் 1 மணிக்கு அன்னதானம் தொடங்கியது. பின்னர் மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை (புஷ்பாபிஷேகம்) நடைபெற்றது. இதற்கான  ஏற்பாடுகளை தெய்வி முருகன் ஆலய நிர்வாக குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள்,  பக்தர்கள் சங்கத்தினர் செய் திருந்தனர். இதே போல் குமாரகோவில், வெள்ளிமலை சுப்பிரமணியசுவாமி, கன்னியாகுமரி முருகன்குன்றம் உள்ளிட்ட கோயில்களிலும் திருக்கல்யாணம் நடைபெற்றது. மேலும் பல்வேறு கோயில்களில் முருகன் திருக்கல்யாணம் நடைபெற்று பக்தர்களுக்கு விருந்தும் வழங்கப்பட்டது.

Related Stories: